கர்நாடக பிரக்ஞாவந்த ஜனதாவில் கருத்துவேறுபாடு நடிகர் உபேந்திரா புதிய கட்சி தொடங்க திட்டம்

நடிகர் உபேந்திரா புதிய கட்சி தொடங்க திட்டம் தன்னிச்சையாக செயல்படுவதாக நிர்வாகிகள் குற்றச்சாட்டு

Update: 2018-03-05 23:30 GMT
பெங்களூரு,

நடிகர் உபேந்திரா தன்னிச்சையாக செயல்படுவதாக நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் கர்நாடக பிரக்ஞாவந்த ஜனதா கட்சியில் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக நடிகர் உபேந்திரா புதிய கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடக பிரக்ஞாவந்த ஜனதா கட்சியின் நிறுவனரும், தலைமை பொதுச் செயலாளராகவும் இருப்பவர் மகேஷ்கவுடா. அந்த கட்சியில் நடிகர் உபேந்திரா கடந்த ஆண்டு (2017) சேர்ந்து, கட்சி பெயரை புதிதாக அறிமுகம் செய்து கட்சியை தொடங்கினார். கர்நாடக சட்டசபை தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக கட்சியின் தலைவர் உபேந்திராவுக்கும், தலைமை பொதுச் செயலாளர் மகேஷ்கவுடாவுக்கும் இடையே தற்போது கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.

வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் கட்சியின் அங்கீகார கடிதத்தில் கையெழுத்திட தனக்கு மட்டுமே அதிகாரம் வேண்டும் என்று உபேந்திரா கேட்டுள்ளார். அதற்கு அந்த கட்சியின் நிர்வாகிகள், உயர்மட்ட குழு இருப்பதாகவும், அந்த குழுவில் எடுக்கப்படும் முடிவின்படி டிக்கெட் வழங்க வேண்டும் என்றும் கூறினர். இதை உபேந்திரா ஏற்கவில்லை. இதையடுத்து அவர் அந்த கட்சியை விட்டு விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து நடிகர் உபேந்திரா கூறுகையில், “மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கொள்கைகளை வகுத்து செயல்பட்டு வருகிறேன். இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் மகேஷ்கவுடா உள்ளிட்ட நிர்வாகிகள், அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு டிக்கெட் வழங்குகிறார்கள். இதை என்னால் ஏற்க முடியாது. ஏனென்றால் வேட்பாளர்கள் சரி இல்லை என்றால் அதனால் எனக்கு தான் கெட்ட பெயர் வரும். எனவே, டிக்கெட் வழங்கும் கடிதத்தில் நான் மட்டுமே கையெழுத்திடும் அதிகாரத்தை வழங்குமாறு கேட்டேன். அவர்களை நம்பி தான் அவர்கள் உருவாக்கிய கட்சியை நான் நடத்த முன்வந்தேன். உயர்மட்ட குழுவிலும் அவர்களின் ஆதரவாளர்கள் தான் பெரும்பான்மையாக உள்ளனர். இப்போது அந்த நிர்வாகிகள் மாற்றி பேசுகிறார்கள். நான் என்ன செய்ய முடியும்“ என்றார்.

இதுகுறித்து அந்த கட்சியின் துணைத்தலைவர் சிவக்குமார் கூறுகையில், “உபேந்திரா தன்னிச்சையாக செயல்படுகிறார். கட்சியில் உயர்மட்ட குழு இருக்கும்போது, அந்த குழு தான் அனைத்து முடிவுகளையும் எடுக்க வேண்டும். அவருடைய செயல்களால் நாங்கள் அதிருப்தி அடைந்துள்ளோம்“ என்றார்.

அந்த கட்சியின் தலைமை பொதுச் செயலாளர் மகேஷ்கவுடா கூறுகையில், “உபேந்திராவுக்கு கட்சியை பலப்படுத்தும் நோக்கம் இல்லை. கர்நாடக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. கட்சியின் தலைவர்கள் தீவிரமாக சுற்றுப்பயணம் செய்து மக்களின் ஆதரவை திரட்டி வருகிறார்கள். ஆனால் உபேந்திரா இன்னும் மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்யவில்லை. கிராமப்புற மக்களுக்கு இன்னும் இப்படி ஒரு கட்சி இருக்கிறது என்று கூட தெரியவில்லை. உபேந்திராவின் நோக்கம் என்னவென்று தெரியவில்லை. அவர் சர்வாதிகாரமாக செயல்பட விரும்புகிறார். அதை நாங்கள் ஏற்க மாட்டோம்“ என்றார்.

இந்த கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் நடிகர் உபேந்திரா புதிய கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் செய்திகள்