வாழப்பாடியில் போலி ஆவணம் தயாரித்து நிலம் மோசடி தே.மு.தி.க.வினர் புகார்

வாழப்பாடியில் போலி ஆவணம் தயாரித்து நிலம் மோசடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தே.மு.தி.க.வினர் புகார்.;

Update: 2018-03-05 22:45 GMT
வாழப்பாடி,

சேலம் மாவட்டம் வாழப்பாடி சின்னுகோனார் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர், நேற்று தனது குடும்பத்தினர் மற்றும் சேலம் புறநகர் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் ஏ.ஆர்.இளங்கோவன், மாநகர் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தார். பின்னர், அவர்கள் அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளிடம் நிலம் மோசடி தொடர்பாக ஒரு புகார் மனுவை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

வாழப்பாடியில் எங்கள் குடும்பத்தினருக்கு சொந்தமாக 54 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 37 ஏக்கர் நிலத்தை சிலர் போலி ஆவணம் தயாரித்து அபகரிப்பு செய்து கொண்டனர். இதுபற்றி கேட்டால் சம்பந்தப்பட்டவர்கள் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். இது தொடர்பாக வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தோம். ஆனால் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த பிரச்சினையில் போலீஸ் சூப்பிரண்டு தலையிட்டு எங்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்க வேண்டும், என கூறியிருந்தனர். இதுகுறித்து சேலம் புறநகர் மாவட்ட தே.மு.தி.க.செயலாளர் ஏ.ஆர்.இளங்கோவன் நிருபர்களிடம் கூறுகையில், வாழப்பாடியில் ஒருவரது குடும்பத்தினருக்கு சொந்தமான பரம்பரை சொத்தை சிலர் மிரட்டி மோசடி செய்து அபகரித்துவிட்டனர். இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டால் வாழப்பாடி போலீசார் மறுத்துவிட்டார்கள். இது சம்பந்தமாகவும், நிலம் அபகரிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்துள்ளோம். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தே.மு.தி.க.சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும், என்றார். 

மேலும் செய்திகள்