ஓமலூர் அருகே கட்டிட தொழிலாளி கொலை வழக்கில் 2 பேர் கைது

ஓமலூர் அருகே கட்டிட தொழிலாளி கொலை வழக்கு தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். கோலி குண்டு விளையாட்டு தகராறில் தலையில் கல்லைப்போட்டு கொன்றோம் என்று கைதான இருவரும் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

Update: 2018-03-05 23:00 GMT
ஓமலூர்,

ஓமலூரை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி கோட்டமேடு கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சின்னபையன், இளநீர் வியாபாரி இவருடைய மகன் கோபால்(வயது 31). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் மதியம் இவர் வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் மாலையில் தாராபுரம் சரபங்கா ஆற்றங்கரையில் உள்ள கொட்டகை பகுதியில் மர்ம நபர்களால் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் அவர் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும், தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் யார்? என்று விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கோட்ட மேடு பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவரின் மகன் பாலு என்ற பாலமுருகன்(23), நாராயணன் என்பவரின் மகன் ரமேஷ்(25) ஆகியோர் சேர்ந்து இந்த கொலையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் நேற்று பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அப்போது அவர்கள் இருவரும் சேர்ந்து கோபாலை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

போலீசாரிடம் அவர்கள் இருவரும் அளித்த பரபரப்பு வாக்குமூலம் விவரம் வருமாறு:-

நாங்கள் இருவரும் நேற்று முன்தினம் மது அருந்தி இருந்தோம். வீட்டுக்கு சென்றால் திட்டுவார்கள் என்பதால் நாங்கள் தாராபுரம் பகுதியில் உள்ள கொட்டகைக்கு சென்று படுத்திருந்தோம். அப்போது அங்கு கோபால் வந்தார். அவர் எங்களுடன் கோலி குண்டு விளையாடினார்.

விளையாட்டின் போது, கோலி குண்டை குறிபார்த்து அடித்தால் 10 ரூபாய் என்று பணம் வைத்து சூதாட்டமாக நடத்தினோம். அப்போது விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் அவரை நாங்கள் இருவரும் சேர்ந்து தாக்கினோம். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் எங்களை சும்மா விடமாட்டேன், கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.

இதையடுத்து அவரை உயிருடன் விட்டால் நமக்கு தான் ஆபத்து என்று கருதி, இருவரும் சேர்ந்து அவரது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து விட்டோம்.

இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். 

மேலும் செய்திகள்