அசோக் கேனி எம்.எல்.ஏ., பரமேஸ்வர் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார்

நைஸ் நிறுவன அதிபரான அசோக் கேனி எம்.எல்.ஏ., பரமேஸ்வர் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார்.

Update: 2018-03-05 22:30 GMT
பெங்களூரு,

நைஸ் நிறுவன அதிபரான அசோக் கேனி எம்.எல்.ஏ. பரமேஸ்வர் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். இதற்கு பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

கர்நாடக மக்கள் கட்சி தலைவராக இருப்பவர் அசோக் கேனி எம்.எல்.ஏ.. இவர் பீதர் தெற்கு தொகுதியில் இருந்து கர்நாடக சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர் ஆவார். நைஸ் நிறுவன அதிபரான இவர் அதன் நிர்வாக இயக்குனராகவும் உள்ளார். பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலை அமைக்க மாநில அரசு நைஸ் நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கியது. இதில் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்து இருப்பதாக பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் குற்றம்சாட்டின.

இதுபற்றி கர்நாடக சட்டசபை கூட்டுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த குழுவின் தலைவராக சட்டத்துறை மந்திரி ஜெயச்சந்திரா இருந்தார். அந்த கூட்டுக்குழு அறிக்கை தாக்கல் செய்து, பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலை திட்டத்தில் முறைகேடு நடந்து இருப்பதாகவும், அதுபற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறும் பரிந்துரை செய்தது.

இந்த நிலையில் அசோக் கேனி எம்.எல்.ஏ. நேற்று பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாநில தலைவர் பரமேஸ்வர் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். முறைகேடு புகார் உள்ளதால் அவரை கட்சியில் சேர்க்கக்கூடாது என்று காங்கிரசில் ஒரு பிரிவினர் வலியுறுத்தினர்.

ஆனால் அந்த எதிர்ப்பை பொருட்படுத்தாமல் அசோக் கேனி காங்கிரசில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பரமேஸ்வர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “அசோக் கேனி எந்த நிபந்தனையும் விதிக்காமல் காங்கிரசில் சேர்ந்துள்ளார். இதற்கு எங்கள் கட்சி மேலிடம் அனுமதி வழங்கியது. நைஸ் நிறுவன முறைகேடுகள் மீது நடைபெறும் எந்த விசாரணையிலும் காங்கிரஸ் கட்சி தலையிடாது. ஜனார்த்தனரெட்டியை கட்சியில் சேர்க்கும் நிலை வரும்போது அதுபற்றி யோசிக்கிறோம். இப்போது அதுகுறித்து பேச தேவை இல்லை“ என்றார்.

இதுகுறித்து மின்சாரத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் கூறுகையில், “நாங்கள் நைஸ் நிறுவனத்தை எங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்ளவில்லை. கர்நாடக மக்கள் கட்சி தலைவர் அசோக் கேனி காங்கிரசில் இணைந்து உள்ளார். நைஸ் நிறுவன முறைகேடுகள் குறித்து எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைக்கு எங்களது ஆட்சேபனை இல்லை. பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஊழல் கறை படிந்தவர்களை அவர்களின் கட்சியில் சேர்த்துக் கொள்கிறார்கள். அதுபற்றி ஊடகங்கள் கேள்வி எழுப்புவது இல்லை“ என்றார்.

அதைத்தொடர்ந்து பேசிய அசோக் கேனி, “நான் எந்த நிபந்தனையும் விதிக்காமல் காங்கிரசில் சேர்ந்துள்ளேன். எனது தொகுதியில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் சக்தி எனக்கு உள்ளது. ஆனால் முதல்-மந்திரி சித்தராமையா ஒரு நிலையான ஆட்சி நிர்வாகத்தை நடத்தினார். ஏராளமான வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்தினார். அதனால் நான் காங்கிரசில் சேர்ந்துள்ளேன்“ என்றார்.

அசோக் கேனி காங்கிரசில் சேர்த்து கொள்ளப்பட்டதற்கு பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மேலும் செய்திகள்