பெருந்துறை அருகே உள்ள தி.மு.க. மண்டல மாநாட்டு திடலை திருச்சி சிவா எம்.பி. பார்வையிட்டார்

பெருந்துறையில் உள்ள தி.மு.க. மண்டல மாநாட்டு திடலை திருச்சி சிவா எம்.பி. பார்வையிட்டார்.;

Update: 2018-03-05 22:00 GMT
பெருந்துறை,

தி.மு.க. மண்டல மாநாடு வருகிற 24-ந் தேதி, 25-ந் தேதி ஆகிய 2 நாட்கள் பெருந்துறை அருகே உள்ள சரளையில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மாநாட்டு திடலை தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும், எம்.பி.யுமான திருச்சி சிவா நேற்று பார்வையிட்டார். பின்னர் கட்சியினரிடம் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இங்கு நடைபெற உள்ள தி.மு.க. மண்டல மாநாட்டுக்காக 41 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மாநாட்டு பந்தலும், 300 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்துவதற்கான இடமும், தலைவர்கள் உட்காருவதற்காக 2 ஆயிரத்து 700 சதுர அடியில் கருங்கல் மேடையும் அமைக்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி மேடையில் தலைவர்கள் ஓய்வு மற்றும் ஆலோசனை நடத்த 4 குளிரூட்டப்பட்ட அறைகளும், 1 லட்சம் பேர் உட்காருவதற்கான இருக்கைகளும் அமைக்கப்படுகிறது. மேலும் 1,400 அடி அகலத்துக்கு பிரமாண்ட முகப்பு தோற்றம் பார்ப்போரை பிரமிக்க வைக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

வருகிற 15-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் இங்கு புகைப்பட கண்காட்சி நடைபெற உள்ளது. அதுமட்டுமின்றி வருகிற 26-ந் தேதி செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 100 ஜோடிகளுக்கு சுயமரியாதை திருமணம் நடைபெறுகிறது. இந்த மாநாடு தி.மு.க.வுக்கு பெரும் திருப்புமுனையாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்