திருவாடானை அருகே ஆற்று மணல் அள்ளிய எந்திரம், டிராக்டர்களை சிறைபிடித்த பொதுமக்கள்

திருவாடானை அருகே ஆற்று மணல் அள்ளிக்கொண்டிருந்த ஒரு ஜே.சி.பி. எந்திரம் மற்றும் 3 டிராக்டர்களை அப்பகுதி மக்கள் சிறைப்பிடித்தனர்.

Update: 2018-03-05 21:30 GMT
தொண்டி,

திருவாடானை தாலுகா தேளூர் ஊராட்சியை சேர்ந்தது மல்லனூர் கிராமம். இங்குள்ள ஆற்று ஓடையில் பலர் இரவு நேரங்களில் அரசு அனுமதியின்றி ஆற்றுமணல் அள்ளுவதை வழக்கமாக வைத்திருந்தனர். கடந்த மாதம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில் தனி போலீஸ் படை அமைக்கப்பட்டு இப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தி மணல் அள்ளும் வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

அதனைதொடர்ந்து இப்பகுதியில் மணல் அள்ளுவது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந் நிலையில் நேற்று காலை ஆற்று ஓடையில் மணல் அள்ளிக்கொண்டிருந்த ஒரு ஜே.சி.பி. எந்திரம் மற்றும் 3 டிராக்டர்களை கிராம பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அங்கு வந்த தாசில்தார் சாந்தி, புல்லூர் வருவாய் ஆய்வாளர் சாரதா, கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கரன் மற்றும் காவல்துறையினர் சிறைபிடிக்கப்பட்ட வாகனங்கள், மற்றும் மணல் அள்ளிய இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது கிராம பொதுமக்கள் தாசில்தார் சாந்தியிடம் கூறியதாவது:- மல்லனூர் கிராமத்தில் ஆற்று ஓடையில் மணல் எடுப்பதால் நீர் வளம், மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவாடனை தாசில்தாரிடம் கிராம மக்கள் சார்பில் நேரில் மனு கொடுத்து வலியுறுத்தினோம். ஆனால் இங்கு மணல் அள்ளுபவர்கள் தாசில்தார் அனுமதியுடன் தான் மணல் அள்ளுவதாக கூறுகின்றனர்.

மேலும் அதற்கான உத்தரவு கடிதத்தையும் காட்டுகின்றனர். தனிநபர் கழிப்பறை கட்டு வதற்காக மணல் அள்ளுவதாக கூறி எடுத்து செல்லும் மணலை கழிப்பறை கட்ட பயன்படுத்தாமல் விற்பனை செய்து வருகின்றனர். எனவே தான் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க இன்று வாகனங்களை சிறைபிடித்துள்ளோம். இனிமேல் இந்த கிராமத்தில் மணல் அள்ள அதிகாரிகள் அனுமதி வழங்கக்கூடாது என உறுதியளிக்க வேண்டும் என்று கூறியதுடன் சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களை விடுவிக்க மறுத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதன்பின்னர் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்திய தாசில்தார் மற்றும் அதிகாரிகள், யூனியன் அதிகாரிகளின் ஒப்புதலோடு கழிப்பறை பணிகளுக்காக சவடு மண் எடுக்க அனுமதி வழங்கியுள்ளோம். இந்த வாகனங்கள் அரசு விதிமுறைகளை மீறி மணல் எடுத்திருப்பது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு மாவட்ட கலெக்டர் அறிவுரையின்படி மேல் நடவடிக்கை எடுக்க வருவாய் கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்யப்படும். இனிமேல் இப்பகுதியில் மணல் அள்ள அனுமதிக்கப்படமாட்டது என்று உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து சிறை பிடிக்கப்பட்ட வாகனங்களை பொதுமக்கள் விடுவித்தனர். பின்னர் மணல் ஏற்றப்பட்டிருந்த 2 டிராக்டர்களையும், ஒரு ஜே.சி.பி. எந்திரத்தையும் வருவாய்துறை அதிகாரிகள் திருவாடானை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். 

மேலும் செய்திகள்