இறந்ததாக கூறி இறுதி சடங்குகள் முடிந்த நிலையில் உயிருடன் வந்த பெண்

கும்பகோணம் அருகே இறந்ததாக கூறி இறுதி சடங்குகள் முடிந்த நிலையில் பெண் ஒருவர் உயிருடன் வந்தார். போலீசார் அளித்த தகவலின்பேரில் அடையாளம் தெரியாதவரின் உடல் எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2018-03-05 23:00 GMT
திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் திருபுவனம் தோப்புத்தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். எலக்ட்ரீஷியன். இவருடைய மனைவி ஆஷா (வயது40). இவர்களுக்கு விக்னேஷ் (22) என்ற மகன் உள்ளார். ஆஷாவிற்கு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு ராமச்சந்திரன் விவாகரத்து பெற்றார். இதையடுத்து மனைவியை பிரிந்த ராமச்சந்திரன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு, மகன் விக்னேசுடன் வசித்து வருகிறார்.

கடந்த மாதம் (பிப்ரவரி) 26-ந் தேதி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என மருத்துவமனை நிர்வாகத்துக்கு அடையாளம் தெரியவில்லை. இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகிகள் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மருத்துவமனையில் இறந்தது திருபுவனத்தை சேர்ந்த ஆஷா என முடிவு செய்த போலீசார் உடலை பெற்றுக்கொள்ள வரும்படி ராமச்சந்திரனிடம் கூறினர். ஆனால் விவாகரத்தாகி 13 ஆண்டுகள் ஆகிவிட்டதால் ஆஷாவின் உடலை பெறமாட்டேன் என அவர் கூறி உள்ளார்.

இதையடுத்து போலீசார் மகன் விக்னேசை அனுப்பி வைக்கும்படி ராமச்சந்திரனை அறிவுறுத்தினர். போலீசாரின் தொடர் வலியுறுத்தல் காரணமாக விக்னேஷ், கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சென்று இறந்த பெண்ணின் உடலை பெற்றுக்கொண்டு, தனது தாய் என கருதி இறுதி சடங்குகளை செய்தார். பின்னர் அந்த பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி சடங்கில் ஆஷாவின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் நேற்று திருபுவனம் கடைவீதியில் ஆஷா சுற்றி திரிந்தார். இறந்து விட்டார் என கூறி இறுதி சடங்குகள் அனைத்தும் முடிந்து விட்ட நிலையில் அவர் அப்பகுதியில் சுற்றி திரிந்தது அவருடைய உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மனநலம் பாதிக்கப்பட்ட ஆஷா திருபுவனம், அம்மாசத்திரம், திருவிடைமருதூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுற்றி திரிவதை வழக்கமாக கொண்டுள்ளார். முன்னதாக அடையாளம் தெரியாத பெண் இறந்தது குறித்து விசாரணை நடந்தபோது அப்பகுதியில் ஆஷாவின் நடமாட்டம் இல்லாததால் போலீசார் அவர் இறந்ததாக கருதி உள்ளனர். தற்போது ஆஷா உயிருடன் வந்திருப்பதால் இறந்த பெண் யார்? என போலீசார் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். அவர் யார்? என அடையாளம் தெரியாத நிலையில் அவருடைய உடல் எரிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்