குடிநீர் வசதி கேட்டு 3 கிராம மக்கள் திரண்டு வந்து மனு

குடிநீர் வசதி கேட்டு 3 கிராம மக்கள் திரண்டு வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.

Update: 2018-03-05 22:45 GMT
கரூர்,

கரூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பொரணி, சுப்பாராயரெட்டியூர், அழகாபுரியானூர் ஆகிய 3 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து, கூட்டத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருந்ததாவது:-

பொரணி, சுப்பாராயரெட்டியூர், அழகாபுரியானூர் ஆகிய 3 ஊர்களிலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆழ்குழாய் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது மோட்டார் பழுதால் தண்ணீர் வினியோகம் நிறுத்தப்பட்டு விட்டது. காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகிக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குழாய்கள் பதிக்கப்பட்டன. ஆனால் குடிநீர் வினியோகிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கோடை காலம் தொடங்கும் முன்பே தற்போது குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் 2 அல்லது 3 கிலோ மீட்டர் தூரம் சென்று பக்கத்து ஊர்களில் குடிநீர் பிடித்து வர வேண்டிய நிலை உள்ளது. எனவே குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக ஆழ்குழாய் கிணறு மூலம் குடிநீர் வினியோகிக்க வேண்டும். காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்திலும் குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

அந்த மனு தொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதி மண்டல வட்டார வளர்ச்சி அதிகாரியை நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ் உத்தரவிட்டார். இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தின் வளாகப்பகுதியில் பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். தற்போது முதல் கட்டமாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகிக்க ஏற்பாடு செய்வதாகவும், அதன்பின் ஆழ்குழாய் கிணறு மூலம் குடிநீர் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

பூசாரிகள் பேரவை மாவட்ட தலைவர் பிச்சைமுத்து தலைமையில் பூசாரிகள் பலர் வந்து ஒரு மனு அளித்தனர். அதில், கரூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் பூசாரிகள் கிராமந்தோறும் கோவிலுக்கு சென்று பூஜை செய்து வருகின்றனர். போதிய வருமானம், சொந்த வீடு இல்லாமல் இருந்து வருகின்றனர். அரசின் திட்டத்தில் பூசாரிகளுக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்திருந்தனர்.

சமூக ஆர்வலர் நாகராஜன் கொடுத்த மனுவில், கிருஷ்ணராயபுரம் அருகே பஞ்சப்பட்டி ஏரி பெரிய அளவிலானது. இதில் முழுவதுமாக தண்ணீர் நிரம்புவது என்பது அரிதானது. இதனால் மழை காலங்களில் காவிரி ஆற்றில் வீணாக செல்லும் தண்ணீரை வாய்க்கால் வெட்டி பஞ்சப்பட்டி ஏரியில் நிரப்ப வேண்டும். பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வரும் இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மாயனூர் காவிரியில் இருந்து பிரிந்து செல்லும் கட்டளை மேட்டு வாய்க்கால், தென்கரை வாய்க்கால்களில் சில இடங்களில் பாலங்கள் சேதமடைந்துள்ளன. இதனை சீரமைக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

சட்டப்பஞ்சாயத்து உறுப்பினர் இயக்கத்தை சேர்ந்த ஞானசேகர் கொடுத்த மனுவில், நெரூர் தென்பாகம் கிராமத்தில் வறுமை கோர்ட்டிற்கு கீழ் உள்ளோர் பட்டியலில் 75 சதவீத பெயர்கள் விடுபட்டுள்ளது. இதனால் மத்திய, மாநில அரசின் திட்டங்களை பொதுமக்கள் பெற முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்டங்கள் கிடைக்க வழி செய்ய வேண்டும், என்று கூறியிருந்தார். இதேபோல் பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனு கொடுத்தனர். மனுக்களை பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ் அதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். கூட்டத்தில் மொத்தம் 442 மனுக்கள் பெறப்பட்டன. 

மேலும் செய்திகள்