குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மனு

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

Update: 2018-03-05 21:30 GMT
விருதுநகர்,

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியின் போது ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும், அடிப்படை வசதிகள் செய்து தர கோரியும் பல்வேறு கிராமமக்கள்மனு கொடுத்தனர். சிவகாசி அருகே உள்ள செங்கமலநாச்சியார்புரம் இந்திரா காலனியில் வசிக்கும் அருந்ததியர் சமுதாயமக்கள் கொடுத்துள்ள மனுவில், தங்கள்பகுதியில் பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் மற்றொரு தரப்பினர் ஆக்கிரமித்து குடிநீர் தொட்டி கட்டி வருவதாகவும், அதற்கு அனுமதி வழங்ககூடாது என்று கூறியிருந்தனர். மேலும் தங்களுக்கான பூங்காவை மீட்டுத்தருமாறு அவர்கள் வலியுறுத்தி இருந்தனர்.

விருதுநகர் அருகே உள்ள வரலொட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் பொதுமக்களின் நடைபாதையை ஆக்கிரமித்து தனிநபர் ஒருவர் குடிநீர் குழாய் மற்றும் சிமெண்டு தளம் அமைப்பதாகவும், இது பற்றி கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியிருந்தனர். மேலும் அந்த ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றி பொதுமக்களின் நடைபாதைக்கு உரிய ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜபாளையம் தாலுகாவில் உள்ள பேயம்பட்டி கிராமமக்கள் தங்கள் ஊரில் 20 வருடத்துக்கு முன்பு கட்டப்பட்ட 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி பயன்பாட்டில் இருந்து வருவதாகவும், தற்போது அந்த குடிநீர் தொட்டி சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதாகவும், அதனை உடனடியாக மராமத்து செய்து தொடர்ந்து குடிநீா வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி உள்ளனர்.

சேத்தூர் 6-வது வார்டை சேர்ந்த 18 சமுதாய பொறுப்பாளர்கள் தங்களுக்கான மயானம் மலைப்புறம்போக்கு இடத்தில் உள்ளதாகவும், மழைக்காலங்களில் இறந்தவர்களை எரியூட்டுவதற்கு கொட்டகை இல்லாமலும், இறுதி சடங்குகள் செய்வதற்கு தண்ணீர் வசதியும் இல்லாமல் இருப்பதால் மயானத்திற்கு கொட்டகை அமைத்து தருவதுடன், ஆழ்குழாய் அமைத்து தண்ணீர் வசதி செய்து தருமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர். 

மேலும் செய்திகள்