எண்ணூர்-கொருக்குப்பேட்டை இடையே பூமிக்கடியில் பெட்ரோலிய குழாய்கள்

பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்காக எண்ணூர்- கொருக்குப்பேட்டை இடையே பெட்ரோலிய பொருட்களை கொண்டு செல்வதற்காக ரூ.730 கோடி மதிப்பில் புதிய குழாய் பதிக்கும் திட்டம் கொண்டுவர எண்ணெய் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

Update: 2018-03-05 23:45 GMT
சென்னை,

சென்னை தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டைக்கு, சென்னை துறைமுகத்தில் இருந்து பெட்ரோலிய பொருட்கள் பூமிக்கடியில் புதைக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இந்த குழாய்கள் 40 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதால் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் அவ்வப்போது குழாய்களில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு வந்தது. இதனால் சுற்றுப்புறச்சூழல் மாசு ஏற்பட்டதுடன், பொதுமக்களும் அச்சத்துக்கு உள்ளாகி வந்தனர்.

இந்நிலையில் பழைய குழாய்களுக்கு பதிலாக புதிய குழாய்கள் அமைப்பதுடன், பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் புதைக்கப்பட்டு இருந்த குழாய்களை மாற்றம் செய்யவும் இந்திய எண்ணெய் நிறுவனம் முடிவு செய்தது.

அதன்படி சென்னை துறைமுகத்தில் இருந்து கொருக்குப்பேட்டைக்கு ரெயில்வே பாதைக்கு அருகே 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.98 கோடி மதிப்பில் புதிய வழித்தடத்தில் புதிய குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன. இந்த குழாய்களில் எண்ணெய் பொருட்களை அனுப்பும் திட்டத்துக்கான தொடக்க விழா சென்னை துறைமுகத்தில் உள்ள இந்திய எண்ணெய் நிறுவனத்துக்கு சொந்தமான முனையத்தில் நேற்று நடந்தது.

புதிய எந்திரம் மற்றும் குழாய்கள் அருகில் அதிகாரிகள் தேங்காய் உடைத்து, பூக்களை தூவினார்கள். தொடர்ந்து வெள்ளை, கருப்பு மற்றும் லூப் எண்ணெய் கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்ட 3 புதிய குழாய்களில் எண்ணெய் பொருட்கள் அனுப்பும் பணியை, இந்திய எண்ணெய் நிறுவனத்தின் இயக்குனர் (பைப் லைன்) அனிஷ் அகர்வால், அதற்கான எந்திரத்தின் பொத்தானை அழுத்தி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது.

பாதுகாப்பு நலன் கருதி பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் புதைக்கப்பட்ட எண்ணெய் குழாய்களை அப்புறப்படுத்திவிட்டு துறைமுகம்-கொருக்குப்பேட்டை இடையே ரெயில்வே பாதையின் அருகே ரூ.98 கோடி மதிப்பில் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன. இவை நவீன தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டு இருப்பதுடன், அதிக உறுதித்தன்மை கொண்டவை என்பதால் கசிவு ஏற்பட வாய்ப்பு இல்லை. கடல் அரிப்பு போன்றவற்றில் இருந்து பாதுகாக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அத்துடன் இந்த குழாய்களில் தவிர்க்க முடியாத காரணத்தால் ஏற்படும் கசிவு, அழுத்தம் கூடுவது, வெப்ப அளவு அதிகரிப்பது போன்றவற்றை சரி செய்ய, தானியங்கி நிறுத்தம் செய்வதற்காக ஆப்டிக்கல் பைபர் கேபிள் பதிக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

இதன் மூலம் பாதிக்கப்படும் வாய்ப்புகளை மிகவும் குறைத்து உள்ளோம். இதேபோன்று எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் இருந்து கொருக்குப்பேட்டைக்கு பெட்ரோலிய பொருட்கள் அல்லது எரிவாயுவை கொண்டுவர ரூ.730 கோடி மதிப்பில் புதிய குழாய்கள் பதிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக மத்திய அரசின் அனுமதிக்காக கோப்புகள் அனுப்பப்பட்டு உள்ளன. அனுமதி கிடைத்த உடன் விரைவில் பணிகள் தொடங்கப்படும்.

தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, சங்ககிரி மற்றும் பெங்களூரு உள்ளிட்ட முக்கிய மையங்களுக்கு கச்சா எண்ணெய் சுத்திகரித்து அனுப்பப்படுகிறது. இதேபோல் மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி நகரங்களுக்கும் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புதிய குழாய் பதிப்பு மூலம் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க உதவுவதுடன், சுற்றுச்சூழலையும் பேணி காக்க முடியும்.

முன்னதாக இந்திய எண்ணெய் நிறுவனத்தின் தமிழக பொதுமேலாளர் கே.எஸ்.ராவ் வரவேற்றார். செயல் இயக்குனர் ராகேஷ் சேகல், ஒய்.கே.குப்தா, நிர்வாக இயக்குனர் எஸ்.என்.பாண்டே, தென்மண்டல செயல் இயக்குனர் நானாவரே, முதன்மை பொதுமேலாளர் கே.எஸ்.ராவ், முதன்மை மேலாளர் (மக்கள் தொடர்பு) சபீதா நட்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். தமிழ்நாடு, புதுச்சேரி செயல் இயக்குனர் ஆர்.சித்தார்த்தன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்