மதுரையில் நடுரோட்டில் பெண்ணை அரிவாளால் வெட்டிய வாலிபர்

நடுரோட்டில் பெண்ணை அரிவாளால் வெட்டிய வாலிபரை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.;

Update: 2018-03-05 23:00 GMT
மதுரை,

மதுரை திருநகர் அடுத்த கப்பலூரை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 27). நேற்று திருப்பரங்குன்றம் சாலை மதுரை கல்லூரி எதிரே நின்று கொண்டிருந்த முத்துலட்சுமியை ஒருவர் வழிமறித்து தகராறு செய்தார். பின்னர் அவர் திடீரென்று கையில் வைத்திருந்த அரிவாளால் முத்துலட்சுமி சரமாரியாக வெட்டினார்.

அப்போது அப்பகுதி பொதுமக்கள் அந்த நபரை பிடித்து சரமாரியாக தாக்கி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் ரத்த வெள்ளத்தில் இருந்த முத்துலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுகுறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், பிடிபட்டவர் வாடிப்பட்டியை அடுத்த சத்திரவெள்ளாளபட்டியை சேர்ந்த சந்திரசேகர் (35) என்பதும், இவர் சேலத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பதும் தெரியவந்தது. முத்துலட்சுமிக்கும், அவருக்கும் கடந்த 5 ஆண்டுகளாக பழக்கம் இருந்துள்ளது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அவர் சந்திரசேகரிடம் சரியாக பேசவில்லை.

எனவே ஆத்திரத்தில் அவர் முத்துலட்சுமியின் செல்போனை பறித்து கொண்டு சென்றார். தனது போனை கொடுக்கும்படி அவர் தெரிவித்ததால், நேற்று காலை சம்பவ இடத்திற்கு வருமாறு கூறினார். அங்கு ஏற்பட்ட தகராறில் தான் முத்துலட்சுமியை சந்திரசேகர் வெட்டியது தெரியவந்தது. இதைதொடர்ந்து சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். 

மேலும் செய்திகள்