குடும்ப தகராறின் காரணமாக மாமியாரை கொன்ற மருமகளுக்கு ஆயுள் தண்டனை அவுரங்காபாத் கோர்ட்டு தீர்ப்பு

குடும்ப தகராறின் காரணமாக மாமியாரை கொன்ற மருமகளுக்கு அவுரங்காபாத் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது.

Update: 2018-03-04 22:30 GMT
அவுரங்காபாத்,

குடும்ப தகராறின் காரணமாக மாமியாரை கொன்ற மருமகளுக்கு அவுரங்காபாத் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது.

குடும்ப பிரச்சினை

அவுரங்காபாத், வாலுஜ் பகுதியில் உள்ள மனிஷா நகரை சேர்ந்தவர் மங்களா சமாதான். இவர் தனது மாமியார் சாகுபாயுடன் வாடகை விட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து அந்த வீட்டின் உரிமையாளர் மங்களா சமாதானை வீட்டை காலி செய்யுமாறு வலியுறுத்தினார். அதன்படி அவர் வீட்டை காலி செய்தார். அன்று இரவு சாகுபாய் பழைய வாடகை வீட்டில் சில பொருட்கள் இருந்ததால் அங்கேயே தங்கினார்.

ஆயுள் தண்டனை

இந்த நிலையில் மாமியார் மீது கடும் கோபத்தில் இருந்த மங்களா சமாதான், பழைய வீட்டுக்கு சென்று மாமியாரை தலையில் கல்லால் தாக்கி கொலை செய்தார். இந்த சம்பவம் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 2-ந் தேதி நடந்தது.

இதுகுறித்து மகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் மங்களா சமாதான் தான் மாமியார் சாகுபாயை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவுரங்காபாத் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கு விசாரணையில் மங்களா சமாதான் மீதான குற்றச்சாட்டு தகுந்த ஆதாரங்களுடன் நிரூபணமானது. இதையடுத்து அவருக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார்.

மேலும் செய்திகள்