தலசாரி அரசு விடுதியில் 10-ம் வகுப்பு மாணவிகளை மானபங்கம் செய்த கண்காணிப்பாளர் கைது

தலசாரி அரசு விடுதியில் 10-ம் வகுப்பு மாணவிகளை மானபங்கம் செய்து வந்த கண்காணிப்பாளரை மாணவியின் பெற்றோர், உறவினர்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்

Update: 2018-03-04 22:20 GMT
வசாய்,

தலசாரி அரசு விடுதியில் 10-ம் வகுப்பு மாணவிகளை மானபங்கம் செய்து வந்த கண்காணிப்பாளரை மாணவியின் பெற்றோர், உறவினர்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மாணவிகள் மானபங்கம்


பால்கர் மாவட்டம் தலசாரியில் அரசு பள்ளியில் படித்து வரும் மாணவிகளுக்கான விடுதி உள்ளது. இந்த விடுதியில் பெண் கண்காணிப்பாளர் பணியிடம் காலியாக உள்ளது. அந்த விடுதியில் பொறுப்பு கண்காணிப்பாளராக சூர்யகாந்த் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

இவர் விடுதியில் தங்கியிருக்கும் 10-ம் வகுப்பு மாணவிகள் இருவரை கடந்த டிசம்பர் மாதம் முதல் மானபங்கம் செய்து வந்துள்ளார்.

இரவு மற்ற மாணவிகள் தூங்கிய பின்னர் 2 மாணவிகளையும் அவர்களது பெற்றோரிடம் இருந்து போன் வந்திருப்பதாக கூறி தனது அறைக்கு அழைத்துச்சென்று, பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டு வந்து இருக்கிறார்.

அடி, உதை

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மாணவிகள் இருவரையும் தனது செல்போனில் மிகவும் ஆபாசமாக படம் பிடித்தும் வைத்துள்ளார். மேலும் சம்பவத்தை வெளியில் கூறக்கூடாது என்று மாணவிகளை அவர் மிரட்டி உள்ளார். அவரது தொல்லை நாளுக்கு நாள் அதிகமானதால் தாங்கமுடியாமல் ஒரு மாணவி நடந்த சம்பவங்கள் குறித்து தனது வீட்டுக்கு ரகசியமாக கடிதம் எழுதி அனுப்பினாள். இதை பார்த்து பதறிப்போன மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் விடுதிக்கு வந்து கண்காணிப்பாளர் சூர்யகாந்தை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

பின்னர் அவரை தலசாரி போலீசில் ஒப்படைத்து புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யகாந்தை கைது செய்தனர். மாணவிகளின் ஆபாச வீடியோக்கள் இருந்த அவரது செல்போனையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் விடுதியில் உள்ள மற்ற மாணவிகள் யாருக்காவது அவர் பாலியல் தொல்லை கொடுத்தாரா? என்பதை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்