திரிபுரா, நாகாலாந்தை தொடர்ந்து கர்நாடக சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதா வெற்றிபெறும் தேவேந்திர பட்னாவிஸ் சொல்கிறார்

திரிபுரா, நாகாலாந்தை தொடர்ந்து வரும் கர்நாடக சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதா கட்சி வெற்றிபெறும் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.;

Update: 2018-03-04 23:15 GMT
மும்பை,

திரிபுரா, நாகாலாந்தை தொடர்ந்து வரும் கர்நாடக சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதா கட்சி வெற்றிபெறும் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

பா.ஜனதா வெற்றி

நடந்து முடிந்த வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து சட்டசபை தேர்தலில் பா.ஜனதா மாபெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை மும்பையில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் தொண்டர்களுடன் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வடகிழக்கு மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சி வெற்றிபெற்றது மட்டுமல்லாமல் 49 முதல் 50 சதவீத ஓட்டுகளையும் அள்ளியுள்ளது. இது பா.ஜனதா கட்சியின் வளர்ச்சியை பறைசாற்றுகிறது. மேலும் இது நடைபெற இருக்கும் கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஊக்கத்தை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மீண்டும் வெற்றிபெறும்

திரிபுரா மாநில வாக்காளர்களுக்கு மற்றொரு காரணத்திற்காகவும் நான் நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன். முந்தைய ஆட்சியில் கடந்த 6 மாதத்தில் மட்டும் சுமார் 27 பா.ஜனதா தொண்டர்கள் வன்முறையால் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வளவு எதிர்ப்பையும் மீறி பா.ஜனதா அங்கு வெற்றியை பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது.

தற்போது பா.ஜனதா அரசு நாட்டில் மொத்தம் 21 மாநிலங்களில், அதாவது தேச வரைபடத்தில் 78 சதவீதத்தை கைப்பற்றியுள்ளது. இந்த வரலாற்று வெற்றியை 2019-ம் ஆண்டு பொது தேர்தலில் மீண்டும் பதிவு செய்வோம்.

இவ்வாறு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்