நாகூர் அருகே வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்தில் 3 பேர் படுகாயம்

நாகூர் அருகே வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-03-04 22:15 GMT
நாகூர்,

நாகூரை அடுத்த ஒக்கூர் கடம்பங்குடி அக்ரகார தெருவை சேர்ந்தவர் சிங்காரவேலு (வயது45). நெல் வியாபாரி. சம்பவத்தன்று இவர் ஒக்கூரில் இருந்து நாகூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பூதங்குடி சென்னை பெட்ரோலியம் கார்பரேஷன் லிட்., நிறுவனம் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்த சிங்காரவேலுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேளாங்கண்ணியை அடுத்த செருதூர் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பா. இவருடைய மகன் ராஜேஷ் (27). மீனவர். சம்பவத்தன்று இவர் தனது மனைவி சுபஸ்ரீ (25) உடன் வாஞ்சூர் பகுதியில் இருந்து செருதூர் நோக்கி கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். நாகூரை அடுத்த வடகுடி சாலை அருகே சென்ற போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் பரவை மெயின்ரோடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் ரவிச்சந்திரன் (25), அவரது நண்பர் வினோத் (26) ஆகியோர் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ரவிச்சந்திரன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள், ராஜேஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளின் மீது மோதியது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ராஜேஷூக்கும், ரவிச்சந்திரனுக்கும் படுகாயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து ராஜேஷ் மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்