ஐகோர்ட்டு உத்தரவுபடி போலீஸ் பாதுகாப்புடன் வயலில் எந்திரம் மூலம் அறுவடை பணி

ஐகோர்ட்டு உத்தரவுபடி திருவெண்காடு அருகே போலீஸ் பாதுகாப்புடன் எந்திரம் மூலம் அறுவடை பணி நடைபெற்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2018-03-04 23:00 GMT
திருவெண்காடு,

திருவெண்காடு அருகே உள்ள திருவாலி மேலபாதி கிராமத்தில் சுமார் 80 ஏக்கரில் விவசாயிகள் சம்பா நடவு பணிகளை செய்து இருந்தனர். இந்த நெற்பயிர்களை எந்திரத்தை கொண்டு அறுவடை செய்ய கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாயிகள் முற்பட்டபோது, அதே பகுதியை சேர்ந்த விவசாய தொழிலாளர்கள் எந்திரத்தை கொண்டு நெல் அறுவடை செய்யக்கூடாது எனவும், தொழிலாளர்களை கொண்டே நெல் அறுவடை பணிகளை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, நெல் அறுவடை பணியை தடுத்து நிறுத்தினர். காலதாமத்தால் அறுவடை செய்ய முடியாமல் வயலிலேயே நெல்மணிகள் உதிர தொடங்கின.

இதனையடுத்து வயல் உரிமையாளர்களையும், தொழிலாளர்களையும் மயிலாடுதுறை உதவி கலெக்டர் தேன்மொழி அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதிலும் எந்தவிதமான உடன்பாடும் ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து வயல் உரிமையாளர்கள் தர்மராஜ், உறுதிமொழி, பிரசன்ன வெங்கடேசன், தமிழ்செல்வி. பூங்கோதை, ஜோதி உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் எந்திரம் மூலம் அறுவடை செய்ய அனுமதி வேண்டி வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எம்.எஸ். ரமேஷ் எந்திரம் மூலம் வயலில் அறுவடை செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதனையடுத்து நேற்று சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் செல்வம், சிங்காரவேல், வேலுதேவி மற்றும் போலீசார் பாதுகாப்புடன் வயல் உரிமையாளர்கள் எந்திரம் மூலம் அறுவடை பணியை தொடங்கினர். இதனால் அந்த பகுதியில் நேற்று முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. 

மேலும் செய்திகள்