காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ரெயில் மறியல்; 20 பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-03-04 23:45 GMT
புதுச்சேரி,

காவிரி பிரச்சினையில் மத்திய அரசு 6 வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு இதில் கவனம் செலுத்தாமல் இருந்து வருவதாக அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த பிரச்சினையில் நடவடிக்கை எடுக்க கோரி தமிழகம்-புதுச்சேரியில் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் தமிழர் அதிகாரம் அமைப்பினர் புதுவையில் நேற்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில தலைவர் தமிழர் மீரான் தலைமையில் புதுச்சேரி ரெயில் நிலையத்தில் திருப்பதி செல்லும் ரெயில் முன்பு அமர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு கேட்டனர். ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 20 பேரை ஒதியஞ்சாலை போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரும் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்