காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகுவோம் - சிவா எம்.எல்.ஏ. பரபரப்பு பேச்சு

மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு அரசு மீது அவநம்பிக்கை ஏற்பட்டு விட்டது. இனியும் சுமையை உயர்த்தினால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகுவோம் என சிவா எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2018-03-04 23:30 GMT
மூலக்குளம்,

மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி புதுவை தெற்கு மாநில தி.மு.க. சார்பில் வில்லியனூர் மெயின்ரோடு மூலக்குளத்தில் நேற்று இளைஞர் எழுச்சிநாள் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தி.மு.க. தலைமை இலக்கிய அணி செயலாளர் கவிதைபித்தன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் சிவா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

புதுவையில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சி நடைபெறுதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி அடிக்கடி கூறி வருகிறார். கடந்த ஆட்சியில் ரங்கசாமி அரசினால் மாநிலத்தின் வளர்ச்சி பாதிப்பட்டது, தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. அரசு துறைகளில் கொல்லைப்புறம் வழியாக முறைகேடாக பணி நியமனம் என தெரிவித்து அதை மாற்றி அமைப்போம் என கூறி தேர்தலில் மக்களிடம் வாக்குகள் பெற்றோம். மாற்றத்தை எதிர்பார்த்து மக்களும் நமக்கு வாக்களித்தனர். ஆனால் மத்திய அரசு புதுவையில் கவர்னர் மூலமாக தொல்லை கொடுத்து வரு கிறது. புதுவையில் ஒருங் கிணைந்த அமைச்சரவை செயல்படவில்லை. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சர் காட்டுப்பாட்டில் உள்ளார்களா? என்பதே தெரியவில்லை.

புதுவையில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சிஅமைந்தது முதல் பல்வேறு குழப்பங்கள், பிரச்சினைகள் நீடித்து வருகிறது. இதனால் அரசின் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து துரிதமாக செயல்பட்டு முதல்-அமைச்சர் நாராயணசாமி மாற்றி அமைக்க வேண்டும்.

புதுவையில் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி பெயரளவில் உள்ளார். தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கான பிரச்சினைகளை கையில் எடுத்து போராடி வருகிறார். இங்குள்ள எதிர்க்கட்சி தலைவரான ரங்கசாமி சரக்கு மற்றும் சேவை வரி, நீட் விவகாரம், பஸ் கட்டண உயர்வு இதில் ஏதாவது ஒரு பிரச்சினையில் தலையிட்டு இருக்கிறாரா? எதிர்க்கட்சி தலைவரின் முகத்தையே மக்கள் மறந்துவிட்டனர்.

சிவப்பு ரேஷன் கார்டு விவகாரத்தில் அரசு தவறான நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு வாக்குறுதி அளித்தபடி இலவச அரிசி வழங்க முடியவில்லை. இதற்கு மாற்றாக வீட்டு வரி 6 மடங்கு உயர்வு, தண்ணீர் வரி 10 மடங்கு உயர்வு, குப்பை வரி, பாதாள சாக்கடை வரி என அனைத்திற்கும் வரி விதித்தது. இது தொடர்பாக எப்போதாவது கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை அழைத்து பேசியது உண்டா? அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து எங்களிடம் எதுவும் சொல்வதில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி எங்களை கூட்டணி என்று சொல்கிறீர்கள்.

சட்டமன்றத்தில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சி நீடிக்க உதவுவோம். அதே சமயத்தில் மக்களின் மீது சுமையை உயர்த்திக் கொண்டே போனால் தி.மு.க.வுக்கு கெட்ட பெயர் வாங்கி தந்தால் காங்கிரஸ் உடனான கூட்டணியில் இருந்து விலகுவோம்.

எம்.எல்.ஏ.க்களுக்கு வாரியத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. வாரியத்தை மேம்படுத்த முயற்சித்தோம். ஆனால் அதற்கு முட்டுக்கட்டையாக அரசு இருந்தால் என்ன செய்வது? அப்படிப்பட்ட பதவி எங்களுக்கு தேவையில்லை. அதனால் தான் நாங்கள் அதில் கவனம் செலுத்தவில்லை. எங்கள் கட்சியின் தலைவர் சொன்னால் வாரியத்தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிடுவோம்.

புதுவையில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் ஏனாமிற்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதனை முதல்-அமைச்சர் நாராயணசாமி தட்டிக்கேட்பதில்லை.

புதுவை அமைச்சர்கள் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை கண்டு எரிச்சல் அடைகிறார்கள். அதே நேரத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் அமைச்சர்கள் குழைந்து பேசுகிறார்கள். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன. இனி வருங்காலத்தில் நாங்கள் அரசிடம் கேள்வி எழுப்புவோம். புதுவையில் வருங்காலத்தில் தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைய பாடுபடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்