தெருக்களை ஆக்கிரமித்து வீடுகளை கட்டுவதால் சுகாதார பணிக்கு சிக்கல், கலெக்டர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மானாமதுரை பகுதியில் உள்ள தெருக்களை ஆக்கிரமித்து வீடுகளை கட்டுவதால் சுகாதார பணிகளுக்கு சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2018-03-04 21:45 GMT
மானாமதுரை,

மானாமதுரையில் உள்ள 18 வார்டுகளில் 32ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். நாளுக்கு நாள் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட வசதிகளுக்காக பல்வேறு கிராமங்களில் உள்ள மக்கள் மானாமதுரையில் குடியேறி வருகின்றனர். மானாமதுரையில் பல்வேறு குடியிருப்புகள் புதிது புதிதாக கட்டப்பட்டு வருகிறது.

இதுதவிர பர்மா காலனி, ஜீவா நகர், சவேரியார்புரம், மறவர் தெரு, மாரியம்மன் கோவில், அன்பு நகர், கன்னர் தெரு மற்றும் பலவேறு வார்டு களில் வசிக்கும் பொதுமக்கள் பலரும் சொந்தமாக வீடுகள் கட்டி வருகின்றனர். மேலும் ஏற்கனவே உள்ள வீடுகளில் பலரும் உரிய அனுமதி இல்லாமல் தற்போது அடுக்குமாடி வீடுகள் கட்டி வருகின்றனர். இதையடுத்து இப்பகுதியில் உள்ள தெருக்களில் நடைபாதை, சாக்கடை வடிகால் வசதி ஆகியவற்றை ஆக்கிரமித்து பலரும் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுப்பாதை, தெருக்களை ஆக்கிரமித்து வீடுகள் கட்டுவதால் அவசர காலங்களில் தெருக்களில் ஆட்டோக்கள் கூட நுழைய முடிவதில்லை. இதை தட்டி கேட்பவர்களை அடியாட்கள் கொண்டு சிலர் மிரட்டுகின்றனர்.

மேலும் தெருவில் உள்ள பொது குழாயில் இருந்து வீடுகளுக்கு இணைப்பு கொடுத்து கட்டுமான பணிகளை மேற்கொள்கின்றனர். தெருக்களை ஆக்கிரமித்து கட்டுமான பணிகள் மேற்கொள்பவர்கள் மீது பேரூராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் பலரும் பொது இடத்தை ஆக்கிரமித்து கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மானாமதுரையில் 18 வார்டுகளிலும் லாரி போன்ற கன ரக வாகனங்கள் செல்லும் வகையில் 10 முதல் 20 அடி அகல பாதை ஏற்கனவே இருந்தது. தற்போது அந்த பாதை ஆக்கிரமிப்பால் 5 அடியாக மாறி விட்டது. இதனால் சுகாதார பணிகள் மேற்கொள்ள முடியாமல் பேரூராட்சி வாகனம் கூட அந்த பகுதிக்குள் நுழைய முடியவில்லை.

இதையடுத்து இந்த தெருவுக்குள் செல்லமுடியாமல் வாகனங்களை கடை பகுதியில் நிறுத்தி விட்டு துப்புரவு பணியாளர்கள் கழிவுகளை சுமந்து வரவேண்டியது உள்ளது. இப்பகுதியில் அனுமதியில்லாமல் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு பல முறை சமூக ஆர்வலர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் முறையிட்டாலும் பேரூராட்சி நிர்வாகம் அதை கண்டு கொள்ளவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் இந்த பிரச்சினையில் தலையிட்டு உடனடியாக நிரந்தர தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வலியுறுத்தி உள்ளனர். 

மேலும் செய்திகள்