திருச்சியில் 145 பெண்களுக்கு அம்மா ஸ்கூட்டர் அமைச்சர்கள் வழங்கினர்

திருச்சியில் 145 பெண்களுக்கு அம்மா ஸ்கூட்டரை அமைச்சர்கள் வழங்கினர்.

Update: 2018-03-04 23:00 GMT
திருச்சி,

திருச்சி மரக்கடை சிந்தாமணி கூட்டுறவு அங்காடி வளாகத்தில் தமிழக அரசின் உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் டி.ரத்தினவேல், ப.குமார் முன்னிலை வகித்தனர்.

தமிழக சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர் களாக கலந்து கொண்டு 145 பெண்களுக்கு அம்மா ஸ்கூட்டர்களை வழங்கி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசும்போது ‘ஜெயலலிதா கொண்டு வந்த இத்திட்டம் தமிழக வரலாற்றில் மாபெரும் திட்டமாகும். சென்னையில் கடந்த மாதம் 24-ந்தேதி இந்த திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டம் இனி காலம் காலமாக தொடரும், யாராலும் இதனை நிறுத்த முடியாது. எனவே இந்த அரசுக்கு நீங்கள் என்றென்றும் ஆதரவாக இருக்கவேண்டும் என கேட்டுக்கொள்றேன்’ என்றார்.

அமைச்சர் வளர்மதி பேசும்போது ‘முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து மிகச்சிறப்பாக செயல்படுத்தி இருக்கிறார். அவர் என்னென்ன திட்டங்களை பெண்களுக்காக கொண்டு வந்தாரோ அத்திட்டங்கள் அனைத்தையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிகச்சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். தொட்டில் குழந்தை திட்டம், பெண்களுக்கு இலவச நாப்கின் வழங்கும் திட்டம், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறார்’ என்றார்.

விழாவுக்கு தலைமை தாங்கிய கலெக்டர் ராஜா மணி பேசும்போது ‘திருச்சி மாவட்டத்தில் முதல் கட்டமாக 3 ஆயிரத்து 922 உழைக்கும் மகளிருக்கு அம்மா இரு சக்கரவாகனம் வழங்குவதற்கு ஒதுக்கீடு பெறப்பட்டு உள்ளது. நகர்ப்புறத்தை சேர்ந்த 1192 பெண்களும், கிராமப்பகுதிகளை சேர்ந்த 1330 பேரும் இதனை பெற உள்ளனர். இந்த இரு சக்கர வாகனங்களை பெறும் பெண்கள் வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பாக பயணிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.

தொடக்கத்தில் மகளிர் திட்ட இயக்குனர் பாபு வரவேற்றார். முடிவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்