நரசாபுரம் நரசிம்ம சாமி கோவில் தேர்த்திருவிழா

நரசாபுரம் நரசிம்மசாமி கோவில் தேர்த்திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2018-03-04 22:00 GMT
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேரிகை பக்கமுள்ள நரசாபுரம் கிராமத்தில் மிகவும் பழமையான நரசிம்ம சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, சிறப்பு பூஜைகளுடன் விழா தொடங்கியது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில், உற்சவ மூர்த்தியை வைத்து பக்தர்கள் பக்தி கோஷங்கள் முழங்க தேரை இழுத்து சென்றனர். தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நரசாபுரம் கிராமத்தில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர், நீர்மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் வாணவேடிக்கைகளுடன் பல்லக்கு உற்சவம், பக்தி சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி, புராண நாடகம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவில், ஓசூர், பாகலூர், பேரிகை, அத்திமுகம், இட்டிபள்ளி, கே.என்.தொட்டி, நெரிகம், கோட்டங்கிரி, பலவனப்பள்ளி, கும்பளம், சென்னசந்திரம், குடிசாதனபள்ளி, சூளகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், கர்நாடக மாநிலம் பெங்களூரு, சர்ஜாபுரம், மாலூர், மாஸ்தி ஆகிய இடங்களிலிருந்தும் திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்