இருங்களூரில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 19 வீரர்கள் காயம்

இருங்களூரில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 19 வீரர்கள் காயமடைந்தனர்.;

Update: 2018-03-04 23:00 GMT
சமயபுரம்,

சமயபுரம் அருகே உள்ள தெற்கு இருங்களூரில் உள்ள மைதானத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாமக்கல், மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் 561 காளைகள் இருங்களூருக்கு அழைத்துவரப்பட்டன. இந்த காளைகளை அடக்குவதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும் மாடுபிடி வீரர்கள் 375 பேர் வந்திருந்தனர்.

மண்ணச்சநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மணிகண்டன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் வீரர்களை பரிசோதித்த பின்னர், அவர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் காளைகளை, கால்நடை பராமரிப்பு துறை லால்குடி உதவி இயக்குனர் டாக்டர் தேவதாஸ் தலைமையில் லட்சுமி பிரசாத், பிரியதர்ஷினி ஆகியோர் கொண்ட மருத்துவக்குழுவினர் பரிசோதித்தனர்.

இதைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை லால்குடி கோட்டாட்சியர் கோவிந்தராஜூலு தொடங்கி வைத்தார். வாடி வாசலில் இருந்து சீறி பாய்ந்து வந்த காளைகளை, வீரர்கள் அடக்கினர். சில காளைகள் வீரர்களிடம் சிக்காமல் தப்பி சென்றன. சில காளைகள் வீரர்களை கதி கலங்க செய்தன. இதில் காளையை அடக்கிய வீரர்களுக்கு தங்க காசு, வெள்ளி காசு, பீரோ, கட்டில், சைக்கிள், குக்கர், மின்சார அடுப்பு, கியாஸ் அடுப்பு உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோல் வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர் களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கியபோது, காளைகள் முட்டியதில் 19 வீரர்கள் காயமடைந்தனர். இதில் திருச்சி காட்டூர் குவளக்குடியை சேர்ந்த ஆனந்தராஜ்(வயது 28), லால்குடி அருகே உள்ள புஞ்சை சங்கேந்தியை சேர்ந்த சக்திவேல்(24), தச்சங் குறிச்சியை சேர்ந்த நந்த குமார்(24), புள்ளம் பாடியை சேர்ந்த ஜெகதீஷ்(23) ஆகிய 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த முகாமில் முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருச்சி, லால்குடி, மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்காக திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட் படுத்தாது வாடிவாசலின் இருபுறங்களிலிருந்தும் அருகே நிறுத்தியிருந்த டிராக்டர்கள் மற்றும் மரங்களின் மீதும் ஏறி நின்று கொண்டு ஜல்லிக் கட்டை பார்த்து ரசித்தனர்.

பாதுகாப்பு பணியில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ரமேஷ்பாபு, சீனிவாசன் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் ஞானவேலன், பாலச்சந்திரன் மற்றும் போலீசார், ஊர்காவல் படையினர் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை ஆரோக்கியசாமி, ஜான் உள்ளிட்ட விழாக்குழுவினர் செய்திருந்தனர். மண்ணச்சநல்லூர் தாசில்தார் மகாலெட்சுமி, இருங் களூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராகினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏராளமான மக்கள் நேற்று அந்த இடத்தில் கூடியதால் டிபன் கடை, சிறு, சிறு தள்ளுவண்டி கடை மற்றும் ஐஸ்கிரீம் கடைகள் திடீரென்று தோன்றி மும்முரமான வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததை காண முடிந்தது. 

மேலும் செய்திகள்