காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என நெல்லையில் நடந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2018-03-04 22:45 GMT
நெல்லை,

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தென்மண்டல கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கட்சியின் நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர்கள் இமான்சேகர், நெல்லையப்பன், நல்லுச்சாமி, பொருளாளர் அய்யாத்துரை பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செய்தி பிரிவு செயலாளர் சண்முகசுதாகர் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டு அளித்த இறுதி தீர்ப்பின் அடிப்படையில் காவிரி நீரை பகிர்ந்து கொள்வதற்காக 6 வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்று குழு அமைக்க வேண்டும். இல்லாவிட்டால், மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி மாநில முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்களை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். மேலும் ஆறுகளில் மழைகாலங்களில் உபரிநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க ஆங்காங்கே தடுப்பணைகளை கட்ட வேண்டும்.

தேவேந்திர குல வேளாளர்களை “வேளாண்மரபினர்“ என்று பொதுப்பெயரில் அழைத்திட வலியுறுத்தி திருச்சியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்கனவே நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அடுத்த மாதம் (ஏப்ரல்) 7–ந் தேதி முதல் தொடர்ந்து கிராமப்பகுதியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவது.

தேவேந்திர குல மக்களின் அனைத்து உட்பிரிவுகளையும் ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் அழைத்திட அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். ஆந்திர அரசு தமிழகத்தின் வடமாவட்டங்களில் இருந்து கூலி வேலைக்கு செல்லும் தமிழர்களை செம்மரம் வெட்டியதாக கூறி சுமார் 500–க்கும் மேற்பட்டவர்களை சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்து இருப்பதை வன்மையாக இந்த செயற்குழு கண்டிக்கிறது. அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். செம்மரங்களை வெட்டுவதற்காக ஆட்களை அழைத்து செல்லும் சமூக விரோத கும்பல்களை ஆந்திர அரசு கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தென்மண்டல செயலாளர் அழகர்சாமி, நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் ரவிதேவேந்திரன், நெல்லை மாநகர் மாவட்ட முன்னாள் செயலாளர் கண்மணி மாவீரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்