சீருடை அணிந்து மோட்டார் சைக்கிளில் சென்ற போது சப்-இன்ஸ்பெக்டரின் கண்முன் மகளிடம் நகை பறிப்பு

கோவையில் சீருடை அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் சென்ற சப்-இன்ஸ்பெக்டரின் கண்முன் அவரது மகளிடம் நகை பறித்த ஹெல்மெட் கொள்ளையனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-03-04 21:30 GMT
கோவை,

கோவை உக்கடம் போலீஸ்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் வெள்ளிங்கிரி. இவர் குடும்பத்துடன் போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார். இவருடைய மகள் லாவண்யா (வயது 26). இவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் லாவண்யா விடுமுறையில் கோவை வந்திருந்தார். அவர் நேற்று காலை 5.30 மணியளவில் சென்னைக்கு புறப்பட்டார். அப்போது வெள்ளிங்கிரி பணிக்கு செல்வதற்காக தனது போலீஸ் சீருடையை அணிந்து கிளம்பிக் கொண்டு இருந்தார். பின்னர் அவர் தனது மகளை ரெயில் நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

அவர்கள் வீட்டிலிருந்து புறப்பட்டு பாலசுந்தரம் சாலையில் வந்து கொண்டிருந்தனர். அங்கு வேகத் தடை இருந்ததால் மோட்டார் சைக்கிளின் வேகத்தை வெள்ளிங்கிரி குறைத்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம ஆசாமி ஒருவர் திடீரென லாவண்யா கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் நகையை பறித்துக்கொண்டு கண்இமைக்கும் நேரத்தில் பறித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வெள்ளிங்கிரி திருடன் திருடன் என்று சத்தமிட்டபடி அந்த மர்ம நபரை பிடிக்க முயன்றார். அதிகாலை நேரம் என்பதால் அந்த சாலையில் ஆட்கள் நடமாட்டம் இல்லை. இதனால் நகைபறிப்பு கொள்ளையன் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டான். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. உடனே கோவை நகரம் முழுவதும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஆனாலும் நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமி சிக்க வில்லை. நகை பறிப்பு ஆசாமி ஹெல்மெட் அணிந்து கருப்பு நிற மோட்டார் சைக்கிளில் சிவப்பு நிற டி-ஷர்ட் அணிந்து வந்தான்.

இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையனின் உருவம் எதுவும் பதிவாகியிருக்கிறதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்