ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் வழக்கில் நிதி நிறுவன அதிபர் உள்பட 3 பேர் கைது

கோவையில், ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் வழக்கில் நிதி நிறுவன அதிபர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-03-04 21:30 GMT
கோவை,

கோவை ஆர்.எஸ்.புரம் டி.வி.ராமசாமி ரோட்டை சேர்ந்தவர் தன்ராஜ் (வயது 42). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் மருந்து கடையும் நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 7-ந் தேதி இரவு தன்ராஜ் வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது அங்கு காரில் வந்த மர்ம கும்பல் அவரை கடத்தி சென்றது. பின்னர் அந்த கும்பல் காரில் வைத்து தன்ராஜை தாக்கி உள்ளனர். மறுநாள் காலையில் அவரை கடத்திச்சென்ற இடத்திலேயே இறக்கிவிட்டு சென்றனர்.

இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில், தன்ராஜ் சவுரிபாளையத்தை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் அஸ்வின் (33) என்பவரிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கி உள்ளார். அந்த கடனை திருப்பி கொடுக்காததால் அஸ்வின் தனது கூட்டாளிகள் 10 பேருடன் சேர்ந்து கடத்தி தாக்கியது தெரியவந்தது.

இந்த வழக்கில் காரமடையை சேர்ந்த கார்த்திக் கண்ணன், சவுரிபாளையத்தை சேர்ந்த அவினேஷ் (28) உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி நிதி நிறுவன அதிபர் அஸ்வின் மற்றும் அவருடைய கூட்டாளிகளான புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பால்ஜோசப் (45), சென்னை வேளச்சேரியை சேர்ந்த ஜான் ராபிந்த் (40) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இதில் பால் ஜோசப்பும், ஜான் ராபிந்தும் அண்ணன் தம்பி ஆவார்கள். இவர்களுடைய சொந்த ஊர் நாகர்கோவில் ஆகும். நண்பர் ஒருவர் மூலமாக ஜான் ராபிந்துடன் அஸ்வினுக்கு அறிமுகம் கிடைத்தது. அஸ்வின் தனது நிதி நிறுவன தொழிலுக்கு ஜான் ராபிந்தை பயன்படுத்தி வந்து உள்ளார். கைதான 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்