சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தீக்குளிக்க முயற்சி

கந்துவட்டி கொடுமையால் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2018-03-04 22:00 GMT
சேலம்,

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பண்ணப்பட்டி பக்கமுள்ள மாரகவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 40), கல் உடைக்கும் தொழிலாளி. நேற்று காலை இவர், தனது மனைவி மகாலட்சுமி (35), மகள் புவனா (13), மகன் கண்ணன் (10), அக்காள் மலர்(42) மற்றும் மகாலட்சுமியின் தம்பி பிரதாப் (28) ஆகியோருடன் புகார் மனு ஒன்று கொடுப்பதற்காக சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார்.

பின்னர் முருகன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலை திறந்து அதிலிருந்த மண்எண்ணெயை தன் உடலிலும், மற்றவர்களுடைய உடலிலும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் வேகமாக ஓடி சென்று தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். இதையடுத்து அவர்கள் மீது தண்ணீர் ஊற்றப்பட்டது. பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

நான் கடந்த ஓராண்டிற்குள் எங்கள் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் 2 தவணையாக தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.20 ஆயிரம் வாங்கினேன். இதற்காக மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் வீதம் ரூ.16 ஆயிரம் கட்டி உள்ளேன். ஆனால் இன்று(நேற்று) காலை அவர் உள்பட சிலர் என்னுடைய வீட்டுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் வட்டி ரூ.10 ஆயிரம், அசல் ரூ.20 ஆயிரம் என மொத்தம் ரூ.30 ஆயிரம் உடனடியாக கொடுக்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்தனர்.

மேலும் அவர்கள் எங்களை தாக்கியதுடன் வீட்டை விட்டும் விரட்டி விட்டனர். கந்துவட்டி கொடுமையால் அவதிப்படும் நாங்கள் வாழ வழி தெரியாமல் தான் தீக்குளித்து தற்கொலை செய்யும் நோக்கத்தில் இங்கு வந்துள்ளோம். எனவே கந்துவட்டி வசூல் செய்யும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் தீக்குளிக்க முயன்ற 6 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்