திருப்பூரில் 100 பெண்களுக்கு மானிய விலை ஸ்கூட்டர்

திருப்பூரில் 100 பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர்களை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

Update: 2018-03-04 22:00 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மகளிர் திட்டத்தின் சார்பில் உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது.

விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். இந்த விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 100 பயனாளிகளுக்கு மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர்களை வழங்கினார். இதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:-

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏழை எளியோர், பெண்கள், ஆதரவற்றோர், முதியோர், விவசாயிகள் மற்றும் நலிவுற்ற பிரிவினர் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். அதன்படி மாணவ, மாணவிகளுக்கான திட்டங்களும், பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்களும், படித்த ஏழை பெண்களின் திருமண நிதியுதவி, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தொலைதூரம் வரைசென்று பணிபுரிந்து வரும் பெண்களின் வசதிக்காக மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், அமைப்புமற்றும் அமைப்பு சாரா நிறுவனங்கள், கடைகள் மற்றும் பிற நிறுவனங்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், சமுதாய அளவிலான அமைப்புகள், ஆகியவற்றில் பணிபுரிவர்களுக்கும், சுயமாக சிறுதொழில் செய்பவர்கள், தொகுப்பூதியம், தினக்கூலி பெறுபவர்கள், ஒப்பந்த ஊழியர்கள், ஆகியோர்களும் பயனடையலாம். திருப்பூர் மாவட்டத்தில் 2017-18-ம் ஆண்டில் இந்த திட்டத்தின் கீழ் 3,530 பேருக்கு அம்மா ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளது. இதன்படி ஊரக பகுதிக்கு 1370 அம்மா ஸ்கூட்டர்களும் மற்றும் நகரப்புற பகுதிக்கு 2160 ஸ்கூட்டர்களும் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக தற்போது 100 பயனாளிக்கு ரூ.25 லட்சம் மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டுள் ளன. இதில் மாற்றுத்திறனாளிகள் 6 பேருக்கும், 11 குடும்ப தலைவிகளுக்கும், 16 ஆதாரவற்ற விதவைகளுக்கும், 19 ஆதிதிராவிடர் மற்றும் பிற பிரிவினர் 48 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதனை உழைக்கும் பெண்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது “ தமிழக அரசு கால்நடை பராமரிப்பு துறை மேம்பாட்டுக்காக ரூ.700 கோடி மத்திய அரசிடம் நிதி கேட்கப்பட்டுள்ளது. கால்நடைத்துறை கல்லூரி மேம்பாட்டு திட்டங்கள், காங்கேயம் இன மாடுகள் அதிகப்படுத்துவதற்கான திட்டங்களும் அடங்கும். இதற்கான ஆய்வு மையங்களும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது” என்றார்.

இந்த நிகழ்ச்சியின் போது, எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன் (திருப்பூர் தெற்கு), கரைப்புதூர் ஏ.நடராஜன் (பல்லடம்), தனியரசு (காங்கேயம்), மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, மகளிர் திட்ட இயக்குனர் மைக்கேல் ஆண்டனி பெர்னாண்டோ, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் லியாகத், உதவி திட்ட அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்