பாலைவனமாகும் பாலாறு

இன்றைய கால நாகரீக வாழ்வின் நாடித்துடிப்பு நதிக்கரையில் இருந்து தான் தொடங்கியது என்பதை யாரும் மறுக்க முடியாது.;

Update: 2018-03-04 05:20 GMT
சிந்து நதிக்கரை முதல் தாமிரபரணி நதிக்கரை வரை மனிதனின் நாகரீக வாழ்க்கை நதிக்கரையை சார்ந்ததாகவே அமையப்பெற்றது.

மனித வாழ்வில் இரண்டற கலந்தவை நதிகள். மனிதனின் தேவைகள் பலவும் ஆரம்பகாலம் முதல் தற்போது வரை நதியை சார்ந்ததாகவே இருக்கிறது. விவசாயத்துக்கும் சரி, தொழிற்கூடங்களுக்கும் சரி தண்ணீரே முதல் மூலதனமாக இருக்கிறது.

தொடக்கத்தில் நதியை சார்ந்து வாழ்ந்த மனிதன் அதை போற்றி வந்தான். காலம் செல்ல செல்ல காட்சிகள் மாறின. இன்றைக்கோ, நதியை ஆக்கிரமித்து அதன் வளங்களை அழித்து வளர்ச்சி என்ற போர்வையில் இயற்கையை பகைத்து வருபவர்களாக நாம் மாறிவிட்டோம்.

இயற்கை நமக்கு கற்றுத்தந்த பாடங்கள் எக்கச்சக்கம். ஆனால், அவற்றையெல்லாம் நாம் உணர்கிறவர்களாக இல்லை. நம் பேராசையால் பல நதிகள் தங்களது இருப்பிடத்தை தொலைத்து வருகின்றன. அவை இருந்த தடம் தெரியாமல் அழிந்து வருகின்றன. அவ்வாறு அழிவை தேடி நிற்கும் ஆறுகளில் பாலாறும் அடக்கம். இது தமிழகத்தில் ஓடும் முக்கியமான ஆறுகளில் ஒன்று.

ஆண்டு முழுவதும் தண்ணீர் கரைபுரண்டோடிய பாலாறு வற்றினால் அதை ஆச்சரியமாக பார்த்த காலம் மாறி... தற்போது ஆற்றில் தண்ணீர் வந்தாலே அதிசயிக்கும் காலம் வந்துவிட்டது. இதற்கு காரணங்கள் பல உண்டு. குறிப்பாக, ஆற்றை காக்கும் கடமையை மறந்து, அந்த பொறுப்பை துறந்து, ஆக்கிரமிப்புகளையும் அடாவடித்தனத்தையும் கட்டவிழ்த்துவிட்டதன் விளைவுதான் இது. வெள்ளம் கரை தொட்டு ஓடிய இடத்தில் இன்றைக்கு கரையையே காணோம். ஆற்றில் வெள்ளத்தையும் காணோம்.

மாறாக, ஆற்று மணலை அள்ளிச்செல்லும் கூட்டத்தை தான் பார்க்க முடிகிறது. அதுமட்டுமா, இந்தியாவில் உள்ள நதிகளை ஆய்வு செய்த மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் தமிழகத்தில் உள்ள 6 நதிகள் மிகவும் மாசு அடைந்திருப்பதாக குறிப்பிட்டு உள்ளது. அதிலும் முதன்மையான இடத்தை பாலாறு பிடித்துள்ளது.

ஏற்கனவே தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக மாநிலம் தான் இந்த ஆற்றின் பிறப்பிடம். அங்கிருந்து ஆந்திர மாநிலத்தில் நுழைந்து தமிழகத்தில் பாய்ந்து ஆர்ப்பரிக்கும் வங்க கடலில் கலக்கிறது. 3 மாநிலங்களை தழுவி ஓடும் இந்த ஆறு, தமிழகத்தில் தான் நீண்ட தூரம் பயணிக்கிறது. அதாவது, ஆந்திர மாநிலத்தில் 45 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே அந்த ஆறு ஓடுகிறது.

ஆனால், அம்மாநில அரசு தங்கள் மாநில மக்களுக்காக பல தடுப்பணைகளை பாலாற்றின் குறுக்கே கட்டி உள்ளது. 225 கிலோ மீட்டர் தூரம் தமிழகத்தில் பயணிக்கும் அந்த பாலாற்றில் தடுப்பணைகள் இல்லாதது வேதனை அளிப்பதாகும்.

உலக வங்கியிடம் ரூ.1,700 கோடி நிதி பெற்று, மழைக்காலங்களில் பாலாற்று வெள்ளம் வீணாக கடலில் சென்று கலப்பதை தடுத்து தண்ணீரை தேக்கி வைக்க தமிழ்நாட்டில் பாலாறு தொடங்கும் இடத்தில் இருந்து முடியும் இடம் வரை 10 இடங்களில் தடுப்பணைகள் கட்ட தி.மு.க. ஆட்சியில் திட்டம் தீட்டப்பட்டது. ஆனால், அதற்குள் ஆட்சி மாற்றம் கண்டது. தடுப்பணைகள் கட்டும் திட்டமும் கானலாய் போய்விட்டது என தி.மு.க. குற்றம்சாட்டி வருகிறது.

எது எப்படியென்றாலும், மணலை அள்ளிச்செல்வது, ஆற்றை ஆக்கிரமிப்பது ஆகியவற்றை தடுத்தால் தான் பாலாறு இனி பலன் தரும். மேலும், மழைக் காலங்களில் கடலில் வீணாய் தண்ணீர் கலப்பதை தடுக்க கண்டிப்பாக தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும். இல்லையென்றால் பாலாறு பாலைவனமாய் மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை.

-தாஜ்

மேலும் செய்திகள்