சாதனை பெண்களுக்கு ‘புதிய தலைமுறை’ சக்தி விருது உலக மகளிர் தினத்தையொட்டி வழங்கப்பட்டது

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சாதனை பெண்களுக்கு புதிய தலைமுறையின் சக்தி விருது வழங்கப்பட்டது.

Update: 2018-03-03 22:30 GMT
சென்னை,

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி சார்பில் சாதனை பெண்களுக்கு சக்தி விருது வழங்கும் விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.

தலைமை, புலமை, துணிவு, திறமை, கருணை, சாதனை ஆகிய 6 பிரிவுகளில் சாதனை புரிந்த பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு சக்தி விருது வழங்கப்பட்டது.

அதன்படி சிறந்த தலைமைக்கான சக்தி விருது, ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் குழுமத்தின் முதல் பெண் ஆசிரியரான மாலினி பார்த்தசாரதிக்கு வழங்கப்பட்டது.

கிரிக்கெட் வீராங்கனை

புலமைக்கான சக்தி விருது பாடகி வாணி ஜெயராமிற்கும், திறமைக்கான சக்தி விருது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை திருஷ் காமினிக்கும், கருணைக்கான சக்தி விருது ஆதரவற்ற முதியோர்களை பாதுகாக்கும் ஆனந்தம் பவுண்டேஷன் பாகீரதிக்கும், சாதனைக்கான சக்தி விருது டாக்டர் கமலா செல்வராஜூக்கும் கிடைத்தது.

சாதி மறுப்பு திருமணம் செய்ததால் தனது கண்முன்னே கணவரை படுகொலை செய்த தனது குடும்பத்துக்கு தண்டனை வாங்கி கொடுப்பதற்காக போராடிய கவுசல்யாவுக்கு துணிவுக்கான சக்தி விருது கொடுக்கப்பட்டது.

இந்த விருதுகளை எஸ்.ஆர்.எம்.குழும தலைவர் பாரிவேந்தர், புதிய தலைமுறை நிர்வாக இயக்குனர் சத்தியநாராயணன், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பாடகி பி.சுசீலா, நடிகைகள் ரோகிணி, கஸ்தூரி ஆகியோர் வழங்கினார்கள்.

கலந்துகொண்டவர்கள்

விழாவில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, தி.மு.க. எம்.எல்.ஏ. டாக்டர் பூங்கோதை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி உள்பட பலர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்