சேலம் மாநகரில் கடைகள் முன்பு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்

சேலம் மாநகரில் கடைகள் முன்பு கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்று வியாபாரிகளுக்கு போலீஸ் கமிஷனர் அறிவுரை வழங்கி உள்ளார்.

Update: 2018-03-03 22:00 GMT
சேலம்,

சேலம் மாநகரில் உள்ள வியாபாரிகள் மற்றும் நகைக்கடை உரிமையாளர்களுடன் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர், குகை கோகிலா திருமண மண்டபத்தில் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். போலீஸ் துணை கமிஷனர்கள் சுப்புலட்சுமி, தங்கதுரை, உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், வியாபாரிகள் மற்றும் நகைக்கடை உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாநகர காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து வியாபாரிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். அப்போது, வியாபாரிகள் மற்றும் நகைக்கடை உரிமையாளர்களின் குறைகளை கேட்டறிந்த கமிஷனர் சங்கர், அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.

சேலம் மாநகரில் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய ரவுடிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களை கண்டறிந்து தெரிவித்தால் அப்பகுதியில் மாற்று நடவடிக்கை எடுக்கப்படும். வியாபாரிகள் தங்களது கடைகள் முன்பு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். அதாவது உள்புறம் மட்டுமின்றி கடையின் வெளிப்புறத்தில் தெருவை நோக்கி கண்காணிப்பு கேமரா பொருத்துவது அவசியம். அப்போது தான் குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்க உதவியாக இருக்கும். எனவே, வியாபாரிகள் மற்றும் நகைக்கடை உரிமையாளர்கள் அனைவரும் தங்களது கடைகள் முன்பு கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்