தாம்பரத்தில் கஞ்சா விற்ற பெண் கைது 4 முறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்

தாம்பரத்தில் பிரபல பெண் கஞ்சா வியாபாரியை போலீசார் கைது செய்தனர். இவர் ஏற்கனவே 4 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்.;

Update: 2018-03-03 22:22 GMT
தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம் பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த மேற்கு தாம்பரம் கைலாசபுரத்தைச் சேர்ந்த தேவி (வயது 45) என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இவர் ஏற்கனவே பலமுறை கஞ்சா விற்பனை செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டு, 4 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மீண்டும் கைதாகியுள்ள பிரபல கஞ்சா வியாபாரியான தேவியை, போலீசார் தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பள்ளி-கல்லூரி மாணவர்கள்

சென்னை புறநகர் பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து ஒரு கும்பல் கஞ்சா விற்பனை செய்து வருகிறது. தாம்பரம் பகுதியில் ஆட்டோ டிரைவர்கள் மற்றும் தாம்பரம் ரெயில் நிலைய தண்டவாள பகுதிகளில் பிச்சைக்காரர்கள் போல சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் கஞ்சாவை பொட்டலங்களாக போட்டு கிழக்கு தாம்பரம் ரெயில் நிலைய நுழைவுவாயில், ரெயில்வே குடியிருப்பு பகுதி, சானடோரியம் ரெயில் நிலைய தண்டவாள பகுதி, தாம்பரம் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதி, தாம்பரம் ரெயில்வே சுரங்கப்பாலம் பகுதியில் விற்பனை செய்து வருகின்றனர்.

இதேபோல் மேற்கு தாம்பரம் பகுதியிலும் ஆட்டோ நிறுத்தங்களில் ஆட்டோ டிரைவர்கள் சிலர் மூலம் கஞ்சா பொட்டலங்கள் விற்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த கும்பலிடம் பள்ளி, கல்லூரி மாணவர்களே நேரிடையாக சென்று கஞ்சாவை வாங்கி போதைக்கு அடிமையாகும் நிலை உள்ளது.

நடவடிக்கை எடுக்கவேண்டும்

கிழக்கு தாம்பரம் மற்றும் தாம்பரம் ரெயில் நிலைய பகுதியில் ஈடுபட்டு வரும் கஞ்சா விற்பனை கும்பலை கட்டுப்படுத்த தாம்பரம் ரெயில்வே போலீசார், சேலையூர் மற்றும் தாம்பரம் போலீசார் கூட்டாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

3 போலீசாரின் எல்லையில் நடைபெறும் கஞ்சா விற்பனையை தடுக்க 3 போலீஸ் நிலையங்களிலும் உள்ள போலீசார் கூட்டு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளம்வயதினர் கஞ்சா போதைக்கு அடிமையாவதை தடுக்க முடியும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

மேலும் செய்திகள்