மும்பையில் இருந்து சென்னைக்கு போதைப்பொருள் கடத்தி வந்தவர் விமான நிலையத்தில் கைது

மும்பையில் இருந்து சென்னைக்கு போதைப்பொருளை கடத்தி வந்தவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.;

Update: 2018-03-03 22:19 GMT
சென்னை,

இலங்கையை சேர்ந்தவர் சஹாப்தீன் (வயது 55). போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதால் இலங்கை அரசு அவரை தேடப்படும் குற்றவாளி என்று அறிவித்தது. இதையடுத்து சென்னை வந்த அவர் மண்ணடியில் தங்கினார்.

மலேசியா, துபாய், சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு போதைப்பொருள், ஹவாலா பணம் கடத்தலில் ஈடுபட்டார்.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சஹாப்தீனை கடந்த 2009-ம் ஆண்டு கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவர் 2012-ம் ஆண்டு வரை சிறைவாசம் அனுபவித்தார்.

கைது

இந்த நிலையில் சஹாப்தீன் மும்பையில் இருந்து விமானம் மூலம் போதைப்பொருளை கடத்தி வருவதாகவும், அவர் வைத்திருப்பது போலி பாஸ்போர்ட் என்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை வந்து இறங்கிய அவரை உள்நாட்டு விமான நிலையத்தில் கார் நிறுத்தும் இடத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

அவர் மும்பையில் இருந்து கடத்தி வந்த 3.75 கிராம் எடையுள்ள மெத்தாம்பெத்தமின் என்ற போதைப் பொருளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.20 ஆயிரம் ஆகும்.

சிறையில் அடைப்பு

பின்னர் அவரை சென்னை மண்ணடி அங்கப்ப நாயக்கன் தெருவில் வசித்து வந்த வீட்டுக்கு போலீசார் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது போலி வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு போன்ற ஆவணங்களையும், 4 பாஸ்போர்ட்டுகளையும் போலீசார் கைப்பற்றினர்.

கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சஹாப்தீன் கடத்தி வந்த போதைப்பொருள் மிகவும் தீங்கு விளைவிக்க கூடியது என்றும், நினைவாற்றல் குறைந்து உடனடியாக மனநிலை பாதிக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்