ரூ.2 கோடி லஞ்சம்: முன்னாள் டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் மீது ஊழல் தடுப்பு படையில் வழக்குப்பதிவு

ரூ.2 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக கூறப்படுவது தொடர்பாக முன்னாள் டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் மீது ஊழல் தடுப்பு படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2018-03-03 21:30 GMT
பெங்களூரு,

சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக கூறப்படுவது தொடர்பாக முன்னாள் டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் மீது ஊழல் தடுப்பு படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.2 கோடி லஞ்சம்

சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்காக சிறைத்துறை முன்னாள் டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றிருப்பதாகவும் கூறி சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா குற்றச்சாட்டு கூறினார். மேலும் சிறையில் போதைப்பொருட்கள் நடமாட்டம் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்ட குழு விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் சிறையில் முறைகேடுகள் நடப்பதாகவும், அதனை தடுக்க சில பரிந்துரைகளும் அரசுக்கு வழங்கப்பட்டு இருந்தது.

வழக்குப்பதிவு

இந்த பரிந்துரையை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க சிறைத்துறை முன்னாள் டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக கூறப்படுவது குறித்து ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் விசாரணை அறிக்கையை 3 மாதத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் சத்திய நாராயணராவும், ரூபாவும் தங்களின் பணி நடத்தை விதிகளை மீறி செயல்பட்டனரா? என்பது குறித்து விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக கூறப்படுவது குறித்து அரசு உத்தரவின் பேரில் சிறைத்துறை முன்னாள் டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் மீது ஊழல் தடுப்பு படை போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த முறைகேட்டில் ஈடுபட்ட சிறை அதிகாரிகள் மீதும் ஊழல் தடுப்பு படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஊழல் தடுப்பு படை போலீஸ் அதிகாரிகள் தங்களது விசாரணையையும் தொடங்கி நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்