முசிறியில் வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் பணம் திருட்டு

முசிறியில் வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் பணம் திருடும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கியின் வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2018-03-03 22:15 GMT
முசிறி,

முசிறி பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு வங்கியின் வாடிக்கையாளர்கள் பலரது கணக்கிலிருந்து சுமார் ஒரு வருட காலமாக தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். மையங்கள் மூலம் நூதன முறையில் பணம் திருடப்பட்டு வந்துள்ளது. தற்போது கடந்த சில தினங்களாக ரூ.30 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.4 ஆயிரம் என பணம் எடுக்கப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்களின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வந்துள்ளது.

சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் தாங்கள் பணம் எடுக்காத சூழ்நிலையிலும், ஏ.டி.எம். கார்டு தங்களிடம் உள்ள நிலையிலும், ஏ.டி.எம். ரகசிய குறியீட்டு எண்ணை யாருக்கும் தெரிவிக்காத சூழ்நிலையிலும், பணம் எடுக்கப்பட்டதாக வந்த தகவலினால் அதிர்ச்சியடைந்துள்ளனர். நேற்று முன்தினம் முசிறியை சேர்ந்த தேன்மொழி என்பவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.4 ஆயிரம் பணம் திருடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் சம்பந்தப்பட்ட வங்கியின் மேலாளரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் இரவு 11.10 மணிக்கு உங்களது கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

போலீசில் புகார்

இதனால் அதிர்ச்சியடைந்த தேன்மொழி முசிறி போலீசில் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ராவிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முசிறியில் உள்ள குறிப்பிட்ட இந்த வங்கியில் இருந்து, இவ்வாறு நூதன முறையில் பணம் திருடும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதை தடுக்க வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கியின் வாடிக்கையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்