உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர்கள் 3-வது நாளாக நூதன போராட்டம்

உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர்கள் 3-வது நாளாக நூதன முறையில் போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2018-03-03 20:22 GMT
உடுமலை,

உடுமலை நகராட்சி அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளர் மணிகண்டனுக்கு உடுமலை நகராட்சியிலேயே பணி பொறுப்புகள் வழங்க வேண்டும். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட குழாய் பொருத்துனர் செல்வக்குமாரை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள்.

கடந்த ஜனவரி மாதம் நடந்த போராட்டத்தின் போது, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கட்டிடத்தின் சுவரில் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்த சுவரொட்டி ஒட்டியதற்கு நகராட்சி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து தள்ளு, முள்ளு ஏற்பட்டது.

இதில் அரசு ஊழியர் சங்க நிர்வாகி ஒருவரை நகராட்சி அதிகாரி தாக்கியதாகவும், அவர் மீதும், அப்போதைய நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்தவர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரியும் அரசு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கடந்த 1-ந்தேதி முதல் உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதற்காக அவர்கள் நகராட்சி அலுவலக வளாகத்தில் பந்தல் அமைத்துள்ளதுடன், அங்கேயே சமைத்து சாப்பிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக இந்த போராட்டம் நீடித்தது. நேற்று அரசு ஊழியர்கள் நூதன முறையில் போராட்டத்தை நடத்தினார்கள்.

இதற்காக பாடை கட்டி, ஒருவரை முகத்தை தவிர, உடல் முழுவதும் வெள்ளை துணியால் சுற்றி பாடையில் படுக்க வைத்தனர். பின்னர் அவருக்கு நெற்றியில் நாணயம் வைத்து, மாலை அணிவித்து இருந்தனர். பின்னர் அந்த பாடையை 4 பேர் தூக்கி கொண்டு இறுதி ஊர்வலம் போல், நகராட்சி அலுவலகத்தை சுற்றி வந்தனர்.

அப்போது பெண்கள் ஒப்பாரி பாடல் பாடினார்கள். பின்னர் இறந்த நபருக்கு செய்வது போல் இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. அரசு ஊழியர் சங்கத்தின் கோரிக்கைக்கு தீர்வு காணப்படாததால் நகராட்சி நிர்வாகம் செத்துவிட்டதாக கூறி இந்த போராட்டம் நடப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினார்கள். இந்த போராட்டத்தால் நகராட்சி அலுவலகத்தில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்