ஒட்டன்சத்திரம் அருகே டீக்கடைக்குள் கார் புகுந்து மூதாட்டி பலி

ஒட்டன்சத்திரம் அருகே டீக்கடைக்குள் கார் புகுந்து மூதாட்டி ஒருவர் பலியானார். மேலும் தம்பதி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-03-03 22:00 GMT
ஒட்டன்சத்திரம்,

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவர் தனது குடும்பத்தினருடன் கோவையில் இருந்து தூத்துக்குடி நோக்கி ஒரு காரில் சென்று கொண்டிருந்தார். நேற்று காலை திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே தாராபுரம் சாலையில் அந்த கார் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற மற்றொரு கார் திடீரென்று ‘பிரேக்’ போட்டதாக கூறப்படுகிறது. உடனே மோகன் அந்த கார் மீது மோதாமல் இருக்க அவரும் ‘பிரேக்’ போட்டுள்ளார்.

ஆனால் அந்த காரின் பின்புறத்தில் மோகனுடைய கார் மோதியது. பின்னர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த டீக்கடைக்குள் புகுந்தது. இதில் கடையில் அமர்ந்திருந்த அதே பகுதியை சேர்ந்த பழனியம்மாள் (வயது 70) என்பவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலே பலியானார்.

மேலும் காப்பிலிபட்டியை சேர்ந்த கருப்புசாமி, கம்பிலிநாயக்கன்பட்டியை சேர்ந்த வீரமணி, அவருடைய மனைவி பிரபா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். டீக்கடையில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்தன. இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.

உடனே அக்கம்பக்கத்தினர் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டீக்கடையில் ஆட்கள் குறைவாக இருந்ததால் பெரும்விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து அம்பிளிக்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்