குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் வனப்பகுதியில் பயங்கர தீ

குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் வனப்பகுதியில் பயங்கரமாக தீப்பற்றி எரிந்தது.

Update: 2018-03-03 21:30 GMT
குன்னூர்,

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுபுற பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை கடும் பனிபெய்தது. பகலில் வெயிலும், இரவில் பனியும் பெய்தததால் தாவரங்கள் கருகின. இதையடுத்து பிப்ரவரி மாதம் மிதமான மழை பெய்தது. ஆனால் அது போதுமானதாக இல்லை. அதைத் தொடர்ந்து பகலில் கடும் வெயில் நிலவி வருகிறது.

குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி முதல் கல்லார் வரை வனத் துறைக்கு சொந்தமான காடு உள்ளது. இந்த காட்டில் தற்போது மரங்கள் மற்றும் செடிகள் கருகிய நிலையில் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 6.30 மணிக்கு குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி டபுள் ரோடு அருகே வனப்பகுதியில் திடீரென்று தீப்பிடித்தது.

அது காட்டுத்தீயாக பரவி ரன்னிமேடு ரெயில் நிலையம் வரை தொடர்ந்து எரிந்தது. இதனால் வனப் பகுதியில் இருந்த மரங்கள், செடிகள் தீப்பற்றி எரிந்தன. இதை அறிந்த குன்னூர் தீயணைப்பு துறை, போலீசார், வனத்துறையினர் ஆகியோர் விரைந்து வந்தனர். அவர்கள் வனத்தில் எரியும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் வனப்பகுதியில் அதிவேகமாக தீ எரிவதாலும், புகை மண்டலமாக இருப்பதாலும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க திணறி வருகின்றனர்.

இருள்சூழ்ந்த நிலையில் வனப்பகுதியில் தீப்பிடித்து உள்ளதால், அதற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. ஆனாலும், காட்டுத்தீ, காட்டேரி தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்கு பரவாமல் இருக்க தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீ எரிந்து முடிந்த பிறகு எவ்வளவு ஏக்கர் வனப்பகுதி எரிந்து உள்ளது என்பது தெரிய வரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்