மலேசியாவுக்கு வேலைக்கு சென்ற பாவூர்சத்திரம் வாலிபர் திடீர் சாவு உடலை மீட்டு தரக்கோரி கலெக்டரிடம் பெற்றோர் மனு

மலேசியா நாட்டுக்கு வேலைக்கு சென்ற பாவூர்சத்திரத்தை சேர்ந்த வாலிபர் அங்கு திடீரென இறந்தார்.

Update: 2018-03-03 21:00 GMT
பாவூர்சத்திரம்,

மலேசியா நாட்டுக்கு வேலைக்கு சென்ற பாவூர்சத்திரத்தை சேர்ந்த வாலிபர் அங்கு திடீரென இறந்தார். இதையடுத்து அவரது உடலை மீட்டுத் தருமாறு அவரது பெற்றோர் கலெக்டரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனு கொடுத்தனர்.

வாலிபர் சாவு

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள நாகல்குளத்தை சேர்ந்தவர் மாரியப்பன். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி மாலதி. இவர்களுடைய 2-வது மகன் இசக்கிதுரை (வயது 24). இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ந் தேதி மலேசியாவுக்கு தனியார் ஏஜென்சி மூலம் 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் இசக்கிதுரை கடந்த 28-ந்தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்து விட்டதாக, அவருடன் வேலை செய்பவர்கள் மாரியப்பனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து உள்ளனர். பின்னர் மீண்டும் அவர்களை தொடர்பு கொண்டபோது இணைப்பு கிடைக்கவில்லை.

உடலை மீட்டுத்தர கோரிக்கை


இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியை சந்தித்து, இசக்கிதுரையின் உடலை பத்திரமாக மீட்டு தங்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு கண்ணீர்மல்க கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். இதேபோல் நெல்லை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கே.ஆர்.பி.பிரபாகரனிடமும் மனு கொடுத்துள்ளனர்.

வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற வாலிபர் திடீரென இறந்த சம்பவம் நாகல்குளம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்