கார்த்தி சிதம்பரம் கைதுக்கு ப.சிதம்பரமும், காங்கிரசாருமே பொறுப்பேற்க வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு ப.சிதம்பரமும், காங்கிரசாருமே பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Update: 2018-03-03 23:15 GMT
தேவகோட்டை,

தேவகோட்டையில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட சக்திகேந்திர, மகாசக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் வாக்குசாவடி பணியாளர்கள், தொண்டர்கள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கூட்டம் முடிந்தவுடன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பா.ஜனதா மதவாத அமைப்பு என்று கூறுகிறார். எந்த அடிப்படையில் பா.ஜனதா மதவாத கட்சியாக செயல்படுகிறது என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். கார்த்தி சிதம்பரம் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பழி வாங்கும் செயல் இல்லை. ஆதாரத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு ப.சிதம்பரம், காங்கிரஸ் கட்சியினர் தான் பொறுப்பேற்க வேண்டும். ஊழல் செய்தால் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.

காஞ்சீபுரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் நடந்த தவறுகளை தமிழக அரசு கண்டறிந்து சம்பந்தப்பட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நதிநீர் பிரச்சினைக்கு மத்திய அரசு மாற்றுவழி திட்டத்தையும், கோதாவரி திட்டத்தையும் செயல்படுத்த முனைப்புடன் செயல்படுகிறது. ‘வளம் வருவோம், பயன் பெறுவோம்’ என்ற முனைப்புடன் ஒரு மாதத்திற்கு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களையும், பொறுப்பாளர்களையும் சந்திக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது சிவகங்கை மாவட்ட தலைவர் வக்கீல் சொக்கலிங்கம், கோட்டபொறுப்பாளர் ராஜேந்திரன், கல்லல் ஒன்றிய தலைவர் வக்கீல் முருகேசன், மாவட்ட துணைத்தலைவர்கள் விஸ்வநாத கோபால், மாநில எஸ்.சி. அணி செயலாளர் ஆதினம் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்