சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசன கருவிகள்

மாவட்டத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகள் சொட்டுநீர் பாசனம், மழைத்தூவான், தெளிப்பு நீர் பாசனம் உள்ளிட்ட கருவிகளை 100 சதவீதம் மானியத்தில் பெற விண்ணப்பிக்கலாம்.

Update: 2018-03-03 21:45 GMT
சிவகங்கை,

மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விவசாயிகள் தங்களது பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம், மழைத்தூவான், தெளிப்புநீர் பாசனம் மூலம் நீர் பாய்ச்சும்போது நீர் விரயமாவது தடுக்கப்படுகிறது. ஒரு ஏக்கரில் வாய்க்கால் மூலம் பாய்ச்சும் தண்ணீரை கொண்டு நுண்ணீர் பாசனம் அமைப்பதன் மூலம் 3 ஏக்கருக்கு நீர் பாய்ச்சலாம். இதன்மூலம் சாகுபடி பரப்பு அதிகரிப்பதுடன், கூடுதல் மகசூலும் கிடைக்கிறது. இதனால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு உதவிட பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ் சொட்டுநீர் பாசனம், மழைத்தூவான், தெளிப்புநீர் பாசன கருவிகள் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே மானிய விலையில் சொட்டுநீர் பாசனம், மழைத்தூவான், தெளிப்புநீர் பாசன கருவிகள் தேவைப்படும் விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல், நில வரைப்படம், சிறு, குறு விவசாயி சான்று மற்றும் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட சான்றிதழ்கள் மற்றும் நீர் மாதிரி, மண் மாதிரி முடிவுகள், புகைப்படம் ஆகியவற்றுடன் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அந்த வட்டார வேளாண்மை அலுவலகங்களில் விவசாயிகள் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்