திருமானூர் அருகே சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு

திருமானூர் அருகே சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுமா? என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2018-03-03 22:30 GMT
திருமானூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள கீழப்பழுவூரில் ஆலந்துறையார் கோவில் உள்ளது. இங்கு வரும் பக்தர்கள் வசதிக்காக கடந்த 7 வருடங்களுக்கு முன்பு 8 கழிவறைகளை கொண்ட பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. சுமார் ரூ.8 லட்சம் மதிப்பில் ஊராட்சி சார்பில் கட்டப்பட்டதோடு சரி இதுநாள் வரை திறக்கப்பட வில்லை. மின் இணைப்பு பெறப்பட்டும் தண்ணீர் இணைப்பு இதுநாள் வரை கொடுக்கப் படவில்லை.

இதனால் தற்போது அந்த பொது சுகாதார வளாகம் முட்புதர்கள் மண்டி காடாக காட்சியளிக்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இதனை பார்த்து வேதனையுடன் செல்கின்றனர். மேலும், கோவிலுக்கு வருபவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க இடம் இல்லாமல் அவதியடைகின்றனர். எனவே சிதிலமடைந்து காணப்படும் அந்த சுகாதார வளாகத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர். 

மேலும் செய்திகள்