மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தவே மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளோம், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி

மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தவே மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளோமே தவிர பா.ஜனதாவுடன் கூட்டணி ஏதும் இல்லை என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

Update: 2018-03-03 22:45 GMT
விருதுநகர்,

விருதுநகரில் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்துகொண்டு 100 பேருக்கு ஸ்கூட்டர்களை வழங்கினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:-

மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க. அரசு மீது புகார் கூறுவது வாடிக்கைதான். அதை பெரியதாக எடுத்துக்கொள்ள வேண்டியது இல்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து கட்சியினருடன் ஆலோசனை நடத்தியதுடன் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினையும் அழைத்து பேசிஉள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உடனடி சாத்தியம் இல்லை எனது கர்நாடகாவில் தேர்தல் நடைபெறுவதையொட்டி மத்திய மந்திரி நிதின்கட்கரி கூறியிருக்கலாம். அதையெல்லாம் எடுத்துக்கொள்ள வேண்டியது இல்லை. பிரதமர் மோடி இது பற்றி ஏதும் கூறவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இப்போது தான் கட்சி தொடங்கிஉள்ள கமல்ஹாசன் 60 வயதுக்கு மேல் இதைபற்றி பேச தொடங்கிஉள்ளார். கமல்ஹாசன் எழுதி கொடுப்பதை பேசி நடிக்க தெரிந்தவர். எம்.ஜி.ஆரை போன்றோ, ஜெயலலிதாவை போன்றோ மக்களோடு, மக்களாக பழகியது கிடையாது. காவிரி மேலாண்மை வாரியம் குறித்து கமல்ஹாசன் கருத்து கூறுவதை எடுத்துக்கொள்ள வேண்டியது இல்லை.

கமல்ஹாசன் கட்சி தொடங்கியதை பார்த்த ரஜினிகாந்த் புது கட்சி தொடங்கமாட்டார் என்றே நினைக்கிறேன். அரசியலுக்கு வருவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. தேர்தலில் போட்டியிட மக்களை சந்திப்பது என்பது பெரும் சிரமமான காரியம். எனவே ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க மாட்டார் என்றே நம்புகிறேன். அ.தி.மு.க. உறுப்பினர் அட்டை உள்ளவர்களுக்கே நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்பது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு. ஓட்டுனர் உரிமம் உள்ள பணிபுரியும் அனைத்து பெண்களும் இத்திட்டத்தின் மூலம் பயன் அடையலாம். ஆண்டுக்கு ஒரு லட்சம் பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த இந்த திட்டத்தை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

தமிழக அரசு, மத்திய அரசுடன் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காகவே இணக்கமாக இருந்து வருகிறது. அதற்காக பா.ஜனதாவுடன் கூட்டணி என்பது ஏற்புடையது அல்ல. மேலும் தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி பற்றி பேச வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார். அவர் ஒருவர் தான் எம்.பி.யாக உள்ளார். அவர் ராஜினாமா செய்துவிட்டு போக வேண்டியது தான். இவ்வாறு அவர் கூறினார்.

விருதுநகர் எம்.பி. ராதாகிருஷ்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபா, மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தகுமார், ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் தெய்வேந்திரன், உதவி திட்ட அலுவலர் பால்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்