ராமநாதபுரத்தில் தினகரன் அணியினரின் வீடுகள் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீச்சு

ராமநாதபுரத்தில் நள்ளிரவில் தினகரன் அணியினர் 2 பேரின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்யக்கோரி விடிய விடிய போலீஸ் நிலையத்தில் தொண்டர்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2018-03-03 23:00 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் கடந்த சில தினங்களுக்குமுன் அ.தி.மு.க. சார்பில் ஜெய லலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் டாக்டர் மணிகண்டன் அ.தி.மு.க.வின் கரை வேட்டியை தினகரன் அணியினர் கட்டக்கூடாது என்று கண்டனம் தெரிவித்து பேசினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரம் மாவட்ட தினகரன் அணியினர் சார்பில் மாவட்ட செயலாளர் வது.ந.ஆனந்த் தலைமையில் அ.தி.மு.க. கரை வேட்டி கட்டி ஊர்வலமாக சென்று அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் ராமநாதபுரம் கொத்தத் தெருவில் வசித்து வரும் தினகரன் அணியின் இளைஞர் அணி செயலாளர் கமல், இலக்கிய அணி செயலாளர் தவமுனியசாமி ஆகியோரின் வீடுகளின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர்.

இதில் கமல் என்பவரின் வீட்டின் திண்ணைப் பகுதியில் பெட்ரோல் குண்டு வெடித்து தீப்பற்றியது. தவமுனியசாமியின் வீட்டின் வாசல் மேல் பகுதி சுவரில் பெட்ரோல் குண்டு வெடித்து தீப்பற்றி சிதறியது. சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள், அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த தினகரன் அணியின் மாவட்ட செயலாளர் வது.ந.ஆனந்த், மாநில அமைப்பு செயலாளர்கள் முன்னாள் அமைச்சர் வது.நடராஜன், ஜி.முனியசாமி, ஒன்றிய செயலாளர்கள் ராமநாதபுரம் முத்தீஸ்வரன், மண்டபம் ஸ்டாலின் ஜெயச்சந்திரன், நகர் செயலாளர் ரஞ்சித், வக்கீல் அரிதாஸ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் அந்த பகுதியில் திரண்டனர். பெட்ரோல் குண்டு வீசியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தின்போது அந்த பகுதி வீடு ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசாரும், தினகரன் அணி நிர்வாகிகளும் பார்வையிட்டனர்.

இந்த காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதில் தாமதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ராமநாதபுரம் பஜார் போலீஸ் நிலையத்தில் அதிகாலை 3 மணி அளவில் முற்றுகையிட்டனர். குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் அதுவரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என்று வாதிட்டனர்.

இதையடுத்து, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டதோடு, அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதன்பின்னர் பஜார் போலீஸ் நிலையத்திற்கு வந்த வெள்ளத்துரை, தினகரன் அணியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்று, விடிய விடிய நடந்த முற்றுகை போராட்டத்திற்கு பின்னர் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போலீஸ் நிலையத்தில் இருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து மாவட்ட செயலாளர் வது.ந.ஆனந்த் கூறியதாவது:-

எங்கள் அணி நிர்வாகிகள் வீட்டின் மீது அமைச்சரின் தூண்டுதலின்பேரில் 4 பேர் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தயக்கம் காட்டினர். இதனால் நாங்கள் போலீஸ் நிலையத்தில் முற்றுகையிட்டு அறவழியில் போராடினோம். இதன் எதிரொலியாக சம்பவத்தில் ஈடுபட்ட ஆதில் அமீன், பாலசுப்பிரமணியன், சண்முகபாண்டியன், தஞ்சி சுரேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்வதாக உறுதி அளித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து அமைச்சர் டாக்டர் மணிகண்டன் கூறியதாவது:-

அ.தி.மு.க.வினர் தான் அ.தி.மு.க. கரை வேட்டியை கட்டவேண்டும் என்று தான் நான் கூறினேன். கட்சியின் சின்னமும், கழகமும் எங்களிடம்தான் உள்ளன. கட்சியில் இருந்து வெளியே சென்றவர்களை கட்சியில் இருந்து நீக்கியுள்ளோம். நீக்கிய பின்னர் தனி அணியாக செயல் படுவோம் என்று சொல்பவர்கள் எதற்காக எங்களின் கரைவேட்டியை உபயோகப்படுத்துகின்றனர்? நிறைய இடங்களில் இதில் குழப்பம் வருகிறது. அதற்காகத்தான் நான் வேட்டி கட்டுவது தொடர்பாக எனது கருத்தை தெரிவித்தேன். அதற்கு டி.டி.வி.தினகரன் அவரது தரத்தில் பதில் சொன்னார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அதற்கு சரியான பதில் அளித்திருக்கிறார்.

பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவம் என்பது நான் ஏற்பாடு செய்துள்ள வேலைவாய்ப்பு முகாமை சீர்குலைக்க வேண்டும் என்று சதி செய்யும் எண்ணத்தில் தினகரன் அணியினரே செய்துள்ளனர். எங்கள் கட்சியினர் கட்டுக்கோப்புடன் கட்டுப்பாடுடன் இருக்கின்றனர். ஆனால், அவர்கள் மூன்றாம்தர ஆட்களை போல நடந்து கொண்டு எங்கள் மீது வீண்பழி சுமத்துகின்றனர். இதற்கு காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆதில் அமீன் (வயது37) என்பவரை கைது செய்தனர். மற்றவர்களை தேடிவருகின்றனர். 

மேலும் செய்திகள்