இன்கோநகர், அய்யங்கொல்லியில் குப்பைகளை கொட்ட ஏற்பாடு: பேச்சுவார்த்தையில் உடன்பாடு

இன்கோ நகர் மற்றும் அய்யங்கொல்லியில் குப்பைகளை கொட்ட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

Update: 2018-03-03 21:30 GMT
பந்தலூர்,

பந்தலூர் தாலுகா சேரங்கோடு ஊராட்சியில் குப்பைகளை கொட்டுவதற்கு இதுவரை இடம் ஒதுக்கப்பட வில்லை. இதனால் ஊராட்சி நிர்வாகம் எருமாடு இன்கோ நகரில் உள்ள பொது இடத்தில் குப்பைகளை கொட்டி வந்தது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது என புகார் தெரிவித்தனர்.

இதனால் அம்மங்காவு கல்புரா பகுதியில் ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டி வந்தது. இதனால் அந்த பகுதி பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அய்யங்கொல்லியில் இருந்து கொளப்பள்ளி செல்லும் சாலையில் சோதனைச்சாவடி என்ற இடத்தில் சாலையின் மேற்புறம் வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில் குப்பைகள் கொட்ட தீர்மானிக்கப்பட்டது.

அங்கு சில தினங்களுக்கு முன்பு பொக்லைன் எந்திரம் மூலம் நிலத்தை சமப்படுத்தும் பணி தொடங்கப்பட்டது. இதை கண்ட அப்பகுதி மக்கள் குடியிருப்பு பகுதியில் குப்பைகளை கொட்ட அனுமதிக்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் பந்தலூர் தாலுகா அலுவலகத்தில் கூடலூர் ஆர்.டி.ஓ. முருகையன் தலைமையில் அய்யங்கொல்லி பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், தாசில்தார் கோபாலகிருஷ்ணன், கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி, தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு சக்திவேல், இன்ஸ்பெக்டர் சாலைராம் சக்திவேல், கூடலூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரகாஷ் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கிராம நிர்வாக அலுவலகம், தனியார் தேயிலை தொழிற் சாலை, பள்ளிக்கூடம் உள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் என்று பொதுமக்கள் கூறினர். பின்னர் திராவிடமணி எம்.எல்.ஏ. கூறியதாவது:-

சேரங்கோடு, நெலாக்கோட்டை ஊராட்சிகளை வரும் காலத்தில் 11 சிற்றூராட்சிகளாக பிரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் அந்தந்த சிற்றூராட்சிகளில் உள்ள குப்பைகளை அந்தந்த பகுதியில் கிடங்கு அமைத்து தரம் பிரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சேரம்பாடி, எருமாடு பகுதி குப்பைகளை இன்கோ நகரிலும், கொளப்பள்ளி பகுதியில் சேரும் குப்பைகளை கல்புரா பகுதியிலும், அய்யங்கொல்லி பகுதியில் உள்ள குப்பைகளை அங்கேயே கொட்ட ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை பொதுமக்கள் ஏற்று கொண்டனர். இதன் காரணமாக குப்பை கொட்டும் பிரச்சினைக்கு தற்காலிகமாக தீர்வு காணப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையில் வருவாய் ஆய்வாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார், போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் திருமலைச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்