குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்க போலீசாருக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்க போலீசாருக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நாகையில் நடந்த நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு சேகர்தேஷ்முக் கூறினார்.

Update: 2018-03-03 22:30 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் மற்றும் போலீசாரின் நல்லுறவை வளர்க்கும் வகையில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் (காவல்துறை நண்பர்கள்) என்ற சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேகர்தேஷ்முக் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

போலீசார் மற்றும் பொதுமக்கள் சமூக பணிகளில் அதிகமாக ஈடுபட வேண்டும். குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்க போலீசாருக்கு, பொதுமக்கள் உதவியாக இருக்க வேண்டும். சட்டம், ஒழுங்கு பராமரிப்பதிலும், போக்குவரத்தை சீரமைப்பது, குற்ற நடவடிக்கைகள் ஈடுபடும் நபர்களை பிடிப்பது உள்ளிட்ட செயல்களிலும் போலீசாருக்கு, பொதுமக்கள் உதவியாக இருக்க வேண்டும். நடைமுறையில் உள்ள சமுதாய பாதுகாப்பு குறித்த சட்டங்களை தெரிந்து கொண்டு போலீசாருடன் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும்.

மேலும், பொதுமக்கள் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுப்படக்கூடாது. போலீஸ் நிலையத்திற்கு ஏதேனும் குற்றவாளிகளுக்கு பரிந்துரை செய்யும் நோக்கத்துடன் செல்லக்கூடாது. சமூக விரோதிகள், ரவுடிகள் போன்றவர்களுடன் நட்பு வைத்துக்கொள்ளக்கூடாது. போலீஸ் துறையினர் சம்பந்தமான ரகசியங்களை வெளியிடக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் உதவி போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) சிவபிரசாத், துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்செல்வன், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருங்கிணைப்பாளர் முஜிபுர்ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்