ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விஷம் குடித்த சம்பவத்தில் மேலும் ஒருவர் பலி

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விஷம் குடித்த சம்பவத்தில் சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் பரிதாபமாக இறந்தார். எனவே இந்த துயர சம்பவத்தில் தற்போது சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து உள்ளது.

Update: 2018-03-03 22:30 GMT
கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள அய்யர்கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 42). இவரது மனைவி ஜெயந்தி (35). இவர்களது மகள்கள் மகாலட்சுமி(16), மோனிஷா (15). இவர்களுடன் செல்வத்தின் தாய் வள்ளியம்மாளும் வசித்து வந்தார். செல்வம் இதே பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். கடந்த மாதம் 27-ந்தேதி நள்ளிரவு இவர்கள் 5 பேரும் பூச்சி மருந்தை (விஷம்) குடித்துள்ளனர். இது குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதில் கடந்த 28-ந் தேதி வள்ளியம்மாள் இறந்தார். அதனைத்தொடர்ந்து ஜெயந்தியும், செல்வமும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். செல்வத்தின் மகள்களான மகாலட்சுமியும், மோனிஷாவும் தொடர்ந்து சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மோனிஷாவும் நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்து உள்ளது.

ஆஸ்பத்திரியில் இறப்பதற்கு முன்பு போலீஸ் விசாரணையில், தனது அக்காள் மகாலட்சுமி, அதே பகுதியை சேர்ந்த ஏற்கனவே தங்கள் குடும்பத்துடன் பேச்சுவார்த்தை இல்லாத உறவுக்கார வாலிபர் ஒருவரை காதலித்ததாகவும், இதனால் ஏற்பட்ட பிரச்சினையால் குடும்பமே தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் மோனிஷா தெரிவித்து இருந்தார். செல்வம் இறப்பதற்கு முன்பு, விஷம் குடித்ததில் நான் இறந்த பிறகு எனது மகள் மோனிஷா இறந்து விட்டால் அவளை எனது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு அருகில் அடக்கம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதே போன்று மோனிஷாவின் உடல் செல்வத்தின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது.

தற்கொலை சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்