குண்டும் குழியுமாக காணப்படும் படப்பை-புஷ்பகிரி சாலையை சீரமைக்க வேண்டும், பொதுமக்கள் கோரிக்கை

குண்டும் குழியுமாக காணப்படும் படப்பை-புஷ்பகிரி சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-03-03 21:45 GMT
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையில் இருந்து புஷ்பகிரி செல்லும் சாலை ஊரக வளர்ச்சி துறையின் கீழ் யூனியன் சாலையாக இருந்து வந்தது. இந்த சாலை கடந்த 6 மாதத்திற்கு முன்பு மாநில நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் வந்துள்ளது. தற்போது சாலை குண்டும், குழியுமாக காணப் படுகிறது.

ஆனால் இதுநாள் வரை இந்த சாலையில் எந்த சீரமைப்பு பணியும் நடைபெறவில்லை. இதனால் படப்பையில் இருந்து புஷ்பகிரி வழியாக மணிமங்கலம், சேத்துப்பட்டு, மலைப்பட்டு, சாலமங்கலம், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளுக்கும் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இரவு நேரங்களில் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில்:-

இந்த சாலை மழைக் காலங்களில் குண்டும், குழியுமாக காணப்படுவதால் வாகனங்களில் செல்லும் போது அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் இரவு நேரங்களில் பலர் கீழே விழுந்து படுகாயம் அடைகிறார்கள்.

எனவே இந்த சாலையை சீரமைக்க மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்