போலீசாரை கண்டித்து முக்குலத்து புலிகள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் 13 பேர் மீது வழக்குப்பதிவு

போலீசாரை கண்டித்து நாகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முக்குலத்து புலிகள் அமைப்பை சேர்ந்த 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2018-03-03 22:45 GMT
நாகப்பட்டினம்,

நாகையை அடுத்த புத்தூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு முக்குலத்து புலிகள் அமைப்பு சார்பில் மதுரையில் நடைபெற்ற என்கவுண்ட்டரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நிறுவன தலைவர் ஆறு.சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் லெனின், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டியன், நாகை நகர அமைப்பாளர் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மதுரை கூடல்நகரை அடுத்த சிக்கந்தர் சாவடி பகுதியில் சகுனிகார்த்திக், முத்துஇருளாண்டி ஆகிய 2 பேரை என்கவுண்ட்டர் மூலம் சுட்டு கொன்ற மதுரை போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப் பட்டன.

பின்னர் மதுரை போலீசாரின் உருவ படங்களை தீயிட்டு கொளுத்தினர். இதில் கீழ்வேளூர் ஒன்றிய அவைத்தலைவர் வஜ்ரவேலு, வேதாரண்யம் நகர அமைப்பாளர் கிஷோர், நாகை ஒன்றிய இளைஞரணி செயலாளர் சபரிதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நாகை உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ததாக 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். இதையடுத்து நாகை டவுன் போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்