ஊத்தங்கரை அருகே பல்வேறு இடங்களில் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

ஊத்தங்கரை அருகே பல்வேறு இடங்களில் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-03-03 21:30 GMT
ஊத்தங்கரை,

தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த சாத்தனவலசை கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். (வயது 20). இவர் ஊத்தங்கரை பகுதியில் தனது மாமாவின் பேக்கரிக்கு வந்திருந்தார். அவர் கடையில் இருந்த நேரத்தில் ஒருவர், வந்து மோகன்ராஜிடம் பேச்சு கொடுத்தார். சிறிது நேரத்தில் அவரை கத்தியை காட்டி மிரட்டி மோகன்ராஜின் சட்டை பையில் இருந்த ரூ.500-ஐ பறிக்க முயன்றார்.

அப்போது அருகில் இருந்தவர்கள் அங்கு வந்து அந்த நபரை பிடித்து ஊத்தங்கரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில் அவர், போச்சம்பள்ளியை அடுத்த சாத்தனூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் (30) என தெரிய வந்தது.

அவரை பிடித்து விசாரணை நடத்திய போது, அவர் கடந்த ஜனவரி மாதம் அனுமன்தீர்தத்தில் உள்ள மளிகை கடையில் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் திருடியதும், அதே பகுதியில் கடந்த வாரம் ஒரு செல்போன் கடையில் 6 செல்போன்கள் மற்றும் மடிக்கணினி ஆகியவை திருடியதும் தெரிய வந்தது. அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மற்றும் 6 செல்போன்கள், மடிக்கணினி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைதான கோவிந்தராஜ் பல்வேறு இடங்களில் திருடியது விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்