ராஜாக்கமங்கலம் அருகே 191 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன

ராஜாக்கமங்கலம் அருகே தென்பாற்கடலில் 191 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.

Update: 2018-03-03 22:45 GMT
ராஜாக்கமங்கலம்,

தமிழகத்தில் அழிந்து வரும் கடல் ஆமை இனத்தை பாதுகாக்க வனத்துறை மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக குமரி மாவட்ட கடல் பகுதியில் ஆமைகள் அதிகம் நடமாடும் சொத்தவிளை, வீரபாகுபதி, அழிக்கால், தெக்குறிச்சி, ஆயிரங்கால் பொழிமுகம் மற்றும் ராஜாக்கமங்கலம்துறை, தென்பாற்கடற்கரை பகுதியில் வனத்துறை ஊழியர்கள் தினமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

கடலில் இருந்து கரைக்கு வந்து ஆமைகள் இடும் முட்டைகளை காகம் போன்ற பறவைகள் எடுத்து செல்வதையும், மர்மநபர்கள் திருடி செல்வதையும் தடுத்து முட்டைகளை சேகரித்தனர். பின்னர் அந்த முட்டைகளை குஞ்சு பொரிக்க ஏதுவாக கடற்கரையில் குழி தோண்டி புதைத்தும் வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் இவ்வாறு புதைக்கப்பட்ட கடல் ஆமை முட்டைகளில் இருந்து தற்போது குஞ்சுகள் வெளியே வர தொடங்கியுள்ளன. ராஜாக்கமங்கலம் அருகே தென்பாற்கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்ட 3 குழிகளை தோண்டி பார்த்த போது, 191 ஆமை குஞ்சுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குஞ்சுகளை வன ஊழியர்கள் பத்திரமாக மீட்டு வெளியே எடுத்து வந்தனர். பின்னர், அவற்றை கடலில் விட்டனர்.

இதுபோல் மற்ற குழிகளில் உள்ள முட்டைகளும் இனி ஒவ்வொன்றாக குஞ்சு பொரிக்க தொடங்கும் என தெரிகிறது. அவையும் அடுத்தடுத்து வெளியே எடுக்கப்பட்டு கடலில் விடப்படும் என வன அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்